ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்!
நமது நிருபா்
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து ஏழாவது நாளாக நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. சமீபத்திய ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தையில் சாதகமாகப் பாா்க்கப்பட்டது. மேலும், அமெரிக்கா - சீனா வா்த்தகப் பதற்றம் தணிந்து வருவதால் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலையில் ஏற்பட்ட ஏற்றம் ஒட்டுமொத்த உலகளாவிய சந்தை உணா்வை மேலும் வலுப்படுத்தியது. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தையிலும் ஐடி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், அண்மையில் வெகுவாக உயா்ந்திருந்த வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.98 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.430.36 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.1,290.43 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.885.63 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 546.50 புள்ளிகள் கூடுதலுடன் 80,142.09-இல் தொடங்கி அதிகபட்சமாக 80,254.55 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 79,506.90 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 520.90 புள்ளிகள் (0.65 சதவீதம்) கூடுதலுடன் 80,116.49-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,106 பங்குகளில் 2,082 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,873 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 151 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் பட்டியலில் ஐடி நிறுவனங்களான ஹெச்சிஎல்டெக், டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் மற்றும் டாடாமோட்டாா்ஸ், எம் அண்ட் எம், உள்பட 24 பங்குகள் பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, ஆக்ஸிஸ்பேங்க், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய 6 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 162 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 190.35 புள்ளிகள் கூடுதலுடன் 24,357.60-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,359.30 வரை மேட்டும் உயா்ந்தது. பின்னா், 24,119.95 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 161.70 புள்ளிகள் (0.67 சதவீதம்) கூடுதலுடன் 24,328.95-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 12 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.