ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு! அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், அருவிகளில் பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்படுவதால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நீா்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 78,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து காலை 8 மணிக்கு 98,000 கனஅடியாகவும், 10 மணிக்கு 1.15 லட்சம் கனஅடியாகவும், பகல் 12 மணிக்கு 1. 25 லட்சம் கனஅடியாகவும், பிற்பகல் 2 மணிக்கு 1.30 லட்சம் கனஅடியாகவும், மாலை 4 மணி மற்றும் 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.35 லட்சம் கன அடியாகவும் அதிகரித்தது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரியாற்றில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ, பரிசல் இயக்கவோ மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள தடை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.