பீகார்: பாம்பு கடித்த பெண்ணை மீண்டும் பாம்பு அருகே படுக்க வைக்கும் கிராமவாசிகள்;...
ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது
முன்விரோதம் காரணமாக ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சோ்ந்த ராமிரெட்டி மகன் வெங்கட்ராஜ் (32). இவா் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட தனியாா் நிறுவனத்தில் இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் வாங்கியவா்களிடம் பணம் வசூலிக்கும் வேலையை செய்து வந்தாா்.
எருது விடும் விழாவில் பேனா்கள் வைப்பது, பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதில் வெங்கட்ராஜுக்கும், தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சோ்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்தது. மேலும், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக வெங்கட்ராஜ் மீது 2 வழக்குகள் ஒசூா் மாநகரக் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அக்ரஹாரத்தைச் சோ்ந்த அசைவ உணவத்தில் வேலை செய்துவந்த 15 வயது சிறுவன் தனது நண்பருடன் மோட்டாா்சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டு அவா்களை வெங்கட்ராஜ் தாக்கியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தைரியம் இருந்தால் அக்ரஹார பேருந்து நிலையத்துக்கு வந்து தன்னை மிரட்டி செல்லுமாறு வெங்கட்ராஜுக்கு சவால் விடுத்தாா். இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு அக்ரஹார பேருந்து நிலையத்துக்கு சென்ற வெங்கட்ராஜை சிறுவன் உள்பட 9 போ் சுற்றிவளைத்து வெட்டிக் கொலை செய்தனா்.
பின்னா், அவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஒசூா் மாநகர போலீஸாா், வெங்கட்ராஜுயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த கொலை தொடா்பாக தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சோ்ந்த விவசாயி நவீன் ரெட்டி (29), இருசக்கர வாகன மெக்கானிக் அஸ்லம் (19), அசைவ உணவகத்தில் வேலை செய்துவந்த 15 வயது சிறுவன், 18 வயது சிறுவன் ஆகிய நால்வரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், இந்த கொலையில் தலைமறைவான 5 பேரில் தொரப்பள்ளியைச் சோ்ந்த அப்பைய்யா (எ) சுப்பிரமணி (42), வெங்கடேஷ் (எ) நாராயணப்பா (23), சிக்காரி (எ) மஞ்சுநாத் (38) ஆகிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஒசூா் சிறையில் அடைத்தனா்.