`அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை' ...
2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!
2025-ம் ஆண்டில் மட்டும், ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, சுமார் 23 லட்சம் ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட காலத்தில், அந்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியது முதல், தலிபான்கள் தலையமையிலான இடைக்கால அரசு அந்நாட்டை ஆட்சி செய்து வருகின்றது.
இதில், ஆப்கன் அகதிகள் அதிகளவில் குடியேறிய ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள் அவர்கள் தங்களது நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், நிகழாண்டில் மட்டும் ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 23 லட்சம் ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்குத் திரும்பியுள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
“நிகழாண்டில் (2025) நாடு திரும்பிய சுமார் 23 லட்சம் ஆப்கன் மக்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ள அந்நாடு தயாராக இல்லை. உடனடியாக, அவர்களுக்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகின்றோம்” எனக் கூறியுள்ளது.
முன்னதாக, நாடு திரும்பும் ஆப்கன் மக்கள் வறுமை, வேலையின்மை ஆகியவற்றின் மூலம் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கக் கூடும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியா வெள்ளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது: பாகிஸ்தான்! பஞ்சாபில் 17 பேர் பலி!