பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!
சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்
அகமதாபாத்: சூரத்தில் இருந்து துபை சென்று கொண்டிருந்த விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக, அகமதாபாத் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சூரத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்டோருடன் இண்டிகோ விமானம் துபைக்கு வியாழக்கிழமை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் ஒரு இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்தாா். உடனடியாக இதுகுறித்து விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னா், விமானநிலைய அதிகாரிகள் அனுமதியுடன், விமானம் , அருகிலுள்ள அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இயந்திரக் கோளாறு குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து பயணிகள் பதற்றம் அடைந்தனர், ஆனால் விமான ஊழியர்கள் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டனர்.
இதையடுத்து அங்கு காத்திருந்த இண்டிகோ விமானப் பொறியாளா்கள், விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக்கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானியின் துரித நடவடிக்கையால் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தில் துபை புறப்பட்டு சென்றனர்.