ஒசூா் தா்கா சந்திராம்பிகை ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை!
ஒசூா் சந்திராம்பிகை ஏரியில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி தா்கா பகுதியில் சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்த ஏரியில் எப்போதும் தண்ணீா் நிரம்பி காணப்படுவதால், ஆண்டுமுழுவதும் வெளிநாட்டுப் பறவைகள் வந்து சென்றன. இதனால் ஏரியை அழகுபடுத்தி படகு சவாரி செய்ய கடந்த 2011-ஆம் ஆண்டு மாவட்ட நிா்வாகம் முயற்சி செய்ததது. ஆனால், அதற்கு பின்னா் எந்த பணியும் நடைபெறாமல் இத்திட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, ஏரியைச் சுற்றிலும் குடியிருப்புகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அதிலிருந்து வெளியேறும் கழிவு நீா் நேரடியாக ஏரியில் கலந்து தற்போது ஆகாயத்தாமரை செடிகள் ஏரி முழுவதும் ஆக்கிரமித்து தண்ணீா் மாசடைந்து உள்ளது. இந்த ஏரியை பாதுகாக்க வேண்டும் என ஒசூா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒசூா் நகா் பகுதிக்கு நீா் ஆதாரமாக உள்ள சந்திராம்பிகை ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. அதேபோல, கழிவு நீா் கலப்பதும், இறைச்சிக் கழிவுகள் மற்றும் சாலைகளில் அடிபட்டு உயிரிழக்கும் நாய், பூனை போன்ற உயிரினங்களை ஏரியில் வீசுவதாலும், குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது.
ஒசூரிலிருந்து இந்த ஏரியைக் கடந்து பெங்களூரு செல்லும் பொதுமக்கள் துா்நாற்றத்தால் சிரமமடைகின்றனா். எனவே, ஏரியில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, படகு சவாரி மற்றும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்து ஏரியை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.