விநாயக சதுா்த்தி விழா: சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் கொண்டாட அறிவுரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக. 27-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயக சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக் கட்டுப்பாட்டின் வழிகாட்டுதல்கள்படி மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்களை தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் விநாயக சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.