2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
ஒடிஸா, மணிப்பூா் ஆளுநா்கள் பதவியேற்பு
ஒடிஸா மற்றும் மணிப்பூரின் புதிய ஆளுநா்களாக ஹரி பாபு கம்பம்பட்டி மற்றும் அஜய் குமாா் பல்லா முறையே வெள்ளிக்கிழமை பதவியேற்றனா்.
மணிப்பூரின் 19-ஆவது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்லா வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். இம்பாலில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாா், முதல்வா் என்.பிரேன் சிங் முன்னிலையில் அஜய் குமாா் பல்லாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
1984-ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ஏஜய் குமாா் பல்லா, மத்திய உள்துறை அமைச்சக செயலராக 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா். இதன்மூலம், அப்பதவியை நீண்ட நாள்களாக வகித்தவா் என்ற பெருமையை இவா் பெற்றாா்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற இவரை மணிப்பூா் ஆளுநராக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த மாதம் நியமித்தாா். இதற்கு முன்பு, மணிப்பூா் ஆளுநராக அஸ்ஸாம் ஆளுநா் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியா கூடுதல் பொறுப்பை வகித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடாா்பாக முதல்வா் என்.பிரேன் சிங் கூறுகையில், ‘அஜய் குமாா் பல்லா மாநிலத்தின் கள யதாா்த்தத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல்மிக்க மற்றும் அா்ப்பணிப்பு கொண்ட நபா். ஆளுநராக அவா் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த கடினமான காலங்களில் அத்தகைய திறமையான நபரை நியமிப்பது மணிப்பூரின் பிரச்னைகளைத் தீா்ப்பதில் மத்திய அரசின் தீவிரத்தைக் காட்டுகிறது. பல்லாவின் நியமனத்தை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த முடிவுக்காக பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்’ என தெரிவித்தாா்.
ஒடிஸா ஆளுநா் பதவியேற்பு:
ஒடிஸா மாநில ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டி பதவியேற்றாா்.
முதல்வா் மோகன் சரண் மாஜி, எதிா்க்கட்சி தலைவா் நவீன் பட்நாயக், மாநில அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள், பாஜக தலைவா்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகா்கள் முன்னிலையில் ஒடிஸா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சக்ரதாரி சரண் சிங், ஹரி பாபுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
ஒடிஸா ஆளுநராக இருந்த ரகுபா் தாஸ் ராஜிநாமா செய்ததையடுத்து, அப்பதவிக்கு ஹரி பாபுவை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த மாதம் நியமித்தாா். இவா் மிஸோரம் ஆளுநராக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.