செய்திகள் :

ஒரு நாளைக்கு தனிநபர் செலுத்தும் ஜிஎஸ்டி எவ்வளவு?

post image

ஜிஎஸ்டி அறிமுகமானபோது, இந்த எழுத்துகளை உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தும்போதுதான் மக்கள் பார்த்திருப்பார்கள். சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி என மத்திய அரசுக்கு ஒரு வரியும் மாநிலத்துக்கு ஒரு வரியும் போட்டு, இவை இரண்டும் நம்முடன் அமர்ந்து சாப்பிட்டது போன்ற மனநிலையை ஏற்படுத்தியபோதுதான் ஜிஎஸ்டியின் பயங்கரமும் அறிமுகமானது.

இதனால், அப்போது பலரும் உணவகங்கள் சென்று சாப்பிடுவதையே குறைத்துக் கொண்டார்கள். இதெல்லாம் பழங்கதை.

இப்போதோ, நாம் நிற்கவும் சுவாசிக்கவும் கூட நமக்குத் தெரியாமலேயே ஜிஎஸ்டியை செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஏப்ரல் மாதம் பிறந்துவிட்டது. இனி சேமிப்பு, கடந்த காலங்களில் செய்த பொருளாதார தவறுகளை மீண்டும் செய்வதில்லை என பல முடிவுகளை எடுக்கும்போதுதான்.. இந்த ஜிஎஸ்டி கண்ணில் பட்டு உருத்தியது.

அண்மையில் வடிவேலுவின் இரண்டு பாக்கெட்டுகளையும் வெளியே நீட்டியபடி வெளியான ஒரு புகைப்படம்தான் ஜிஎஸ்டி தொடர்பான கவனத்தையும் ஈர்த்தது.

அதில், ஒரு மனிதன், காலையில் எழுந்து அலுவலகம் செல்வதற்குள் எத்தனை ஜிஎஸ்டிகளை செலுத்த வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலும் இடம்பெற்றிருந்தது. சரி.. இதெல்லாம் உண்மைதானா என்று கூகுளில் தேடித் தேடிப் பார்த்தபோதுதான்.. அம்புட்டும் உண்மைதான். நம்ம பாக்கெட் காலியாவதும் இப்படித்தான் என்பது புரிந்தது.

அதாவது, காலையில் எழுந்ததும் நாம் பல் தேய்ப்பதற்கு மட்டும் கிட்டத்தட்ட 23 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்துகிறோம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்.. ஒரு டூத் பேஸ்ட் விலையில் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஒரு டூத் பிரஷ்ஷுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி.

ஒரு குளியல் சோப்புக்கு மீண்டும் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி. பாவம் ஆண்களாக இருந்தால் ஷேவிங் பொருள்களுக்கு 18 சதவீதம். நல்லவேளை இதில் பெண்களுக்கான அழகுச் சாதனப் பொருள்கள் தனித்தனியே இடம்பெறவில்லை. இடம்பெற்றிருந்தால், அதற்கான ஜிஎஸ்டியைப் பார்த்து லேசானது முதல் பலத்த மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்... நல்லவேளையாக தவிர்த்துவிட்டிருக்கிறார்கள். பாவம் பெண்கள் என்று.

தலைக்கு வைக்கும் எண்ணெய்க்கும், ஷாம்புவுக்கும், முகப் பவுடருக்கும் தலா 18 சதவிகிதம் ஜிஎஸ்டி. வெறும் க்ரீம் என்று போட்டு அதன் வகைக்கு ஏற்ப 5 முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூலிக்கிறார்கள்.

பிறகு ஆடைகள்.. ஆள்பாதி ஆடை பாதி என்பதற்கு ஏற்ப இவற்றுக்கும் 5-18 சதவிகிதம் ஜிஎஸ்டி.

தயாராகி கிளம்புவதற்கு முன்பு காலை உணவை உணவகத்தில் சாப்பிட்டால் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இல்லை இல்லை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுகிறோம் என்றால், அங்கு நாம் வைத்திருக்கும் அனைத்துக்கும் ஜிஎஸ்டி போடுவதற்கு தனிக் கட்டுரைதான் போட வேண்டும்.

கிளம்பியாகிவிட்டது.. காலில் மாட்டும் ஷு 18 சதவீதம், கையில் கட்டும் கடிகாரம்.. கட்டுகிறீர்களோ, இல்லை வீட்டிலேயே வைத்துவிட்டு அவசரமாகக் கிளம்புகிறீர்களோ.. அதெல்லாம் கவலையில்லை. அதற்கு வகைக்கு ஏற்ப 5-12 சதவிகிதமும், சொந்த வாகனம் இல்லாமல், ஏதேனும் செயலிகள் மூலம் கார் அல்லது ஆட்டோ ஏறினால் அதற்கு 12 சதவிகிதம்.

அலுவலகத்துக்கு எடுத்து வரும் பேனாவுக்கு 18 - 28 சதவிகிதம், நோட்டுகளுக்கு 12 சதவிகிதம், வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்களுக்கு 18 சதவீதம், மீண்டும் மதியம் வந்துவிட்டதே.. உணவு ஆர்டர் செய்தால் அதற்கு ஒரு 5 சதவிகிதம் என எங்கும் எதிலும் ஜிஎஸ்டிதான்.

இது அல்லாமல் காலையில் குடிக்கும் காபிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி, கையில் வைத்திருக்கும் செல்போனுக்கு 12 சதவீதம், அதற்கு மாதந்தோறும் ரீ-சார்ஜ் செய்வதற்கு 18 சதவீதம், மழையோ, வெய்யிலோ குடை பிடித்துச் செல்கிறீர்கள் என்றால் அதற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு சாதாரண மனிதர், நாள்தோறும் பயன்படுத்தும் மற்றும் உட்கொள்ளும் பொருள்களை வைத்து, ஒரு மாதத்தில் அல்லது ஒரு நாளைக்கு அவர் எவ்வளவு தொகையை ஜிஎஸ்டியாக செலுத்துகிறார் என்று கணக்கிடலாம்.

மேற்சொன்ன குறைந்தபட்ச பயன்பாட்டின்படி, கணக்கிட்டால் ஒரு தனி நபர் தோராயமாக ரூ.20 முதல் ரூ.25-ஐ நாள்தோறும் ஜிஎஸ்டியாக செலுத்துகிறார். இதுவே ஒரு குடும்பமாக இருந்தால் அதற்கேற்ப அந்த ஜிஎஸ்டி தொகை அதிகரிக்கலாம்.

அதாவது, ஒருவர் பயன்படுத்தும் பொருளின் வகை மற்றும் விலையைப் பொறுத்து இந்த ஜிஎஸ்டி தொகையின் மதிப்பு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். சிறந்த தரமான பொருளைப் பயன்படுத்தினால், அதன் விலையில் குறிப்பிட்ட ஜிஎஸ்டியும், குறைந்த தரம் கொண்ட பொருள்களைப் பயன்படுத்தினால், அந்த விலைக்கான ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் என்பதால் இது மாறுபடும். எனவே, இது தோராயமான கணக்கீடுதான்.

இவ்வாறு நாம் உழன்று உழன்று சம்பாதித்தாலும், சேமிக்க இயலாமல் போகிறதே என்று கவலைப்படுபவர்கள், இனி இந்த ஜிஎஸ்டியையும் கணக்கிட்டு, அதற்கேற்ப செலவுகளை செய்து நிதி நிர்வாகத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

வரலாற்றில் மிக மோசமான மோசடி.. போலி விமான நிலைய விற்பனை!

போலி அழைப்பு, மின்னஞ்சல் என தற்போது வகைக்கு ஒரு மோசடிகள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், 1990ஆம் ஆண்டில் நடந்த, வரலாற்றிலேயே இப்படியொரு மோசடி நடந்திருக்காது என்று சொல்லும்... மேலும் பார்க்க

டிரெண்ட் ஆகும் டோலோ 650 மாத்திரை! என்ன ஆனது?

எக்ஸ் தளத்தில் திடீரென்று டோலோ 650 மாத்திரை டிரெண்டாகி வருகின்றது.அமெரிக்காவில் பயிற்சி பெற்று வரும் மதுரையைச் சேர்ந்த டாக்டர் பால் என்றழைக்கப்படும் மருத்துவர் பழனியப்பன் மாணிக்கத்தின் பதிவால் டோலோ 65... மேலும் பார்க்க

சொல்வதெல்லாம் சர்ச்சை.. உச்ச நீதிமன்ற கண்டனத்துக்கு உள்ளாகும் நீதிமன்றம்!

"இந்த உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது. தற்போது, இதே நீதிமன்றத்திலிருந்து வேறொரு நீதிபதி இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஏன் இதுபோன்ற கருத்துகள் வெளியிடப்பட வேண்டும்?" என்று உச்ச நீதிமன்றம்... மேலும் பார்க்க