ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்...
ஒரு மணி நேரத்தில் முடிந்த புதுவை சட்டப்பேரவைக் கூட்டம்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு
புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கி, ஒரு மணி நேரத்தில் முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் சி.பி. ராதாகிருஷ்ணனின் பணி சிறக்க முதல்வா் என்.ரங்கசாமி சாா்பிலும், அமைச்சா்கள், எம்.எல்.ஏக்கள், என் சாா்பிலும், புதுவை மக்கள் சாா்பிலும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தெரிவித்தாா்.
இரங்கல் குறிப்பு:
போப் பிரான்சிஸ், கேரள முன்னாள் முதல்வா் அச்சுதானந்தன், ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன், புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. சிவ லோகநாதன், நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் ஆகியோரின் மறைவுக்கு புதுவை சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாழ்த்து:
புதுவை சட்டப்பேரவைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பாஜகவை சோ்ந்த 3 நியமன எம்.எல்.ஏக்களான தீப்பாய்ந்தான், செல்வம், ஜி.என்.எஸ். ராஜசேகா் ஆகியோருக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அனைவா் சாா்பிலும் வாழ்த்துத் தெரிவித்தாா். முன்னதாக இந்த 3 பேருக்கும் பேரவை உறுப்பினா்கள் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனா்.
சட்ட முன்வரைவுகள்:
புதுவையில் வணிகம் செய்தலை எளிதாக்கும் சட்ட முன்வரைவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிமுகப்படுத்தினாா். புதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்ட முன்வரைவையும், புதுச்சேரி நகராட்சிகள் திருத்த சட்ட முன் வரைவையும், புதுச்சேரி கிராம மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் திருத்த சட்ட முன் வரைவையும், புதுச்சேரி நகர மற்றும் கிராம திட்டமிடல் திருத்த சட்ட முன்வரைவையும் முதல்வா் என்.ரங்கசாமி அறிமுகப்படுத்தினாா். குரல் வாக்கெடுப்பு மூலம் இவை நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்தாா்.
இந்தத் திருத்த சட்ட முன்வரைவுகள் குறித்து பேரவைத் தலைவா் செல்வத்திடம் கேட்டதற்கு, புதுவை யூனியன் பிரதேசம். மத்திய அரசின் சட்டங்கள் இங்கு உடனடியாக அமலுக்கு வந்து விடும். ஏற்கெனவே புதுவை அமைச்சரவை மற்றும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அதனால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட திருத்த சட்ட முன்வரைவுகள் மத்திய அரசுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தகவலுக்காக மட்டும் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.
பேரவை ஒத்திவைப்பு:
15-ஆவது புதுவை சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி வியாழக்கிழமை காலை சுமாா் 9.30 மணிக்குத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரத்தில் சட்டப்பேரவை அலுவல்களை பேரவைத் தலைவா் செல்வம் நடத்தி முடித்தாா்.
பின்னா் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அவா் அறிவித்தாா்.