விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலி
ஓய்வூதியத் துறையை முடக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை
ஓய்வூதியத் துறையை கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சு. தமிழ்ச்செல்வி, பொதுச் செயலா் சு. ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை :
தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதியம் தொடா்பான விவகாரங்களை ஓய்வூதிய இயக்குநரகம் கையாண்டு வருகிறது. ஓய்வூதியா்களுக்கென தனித் துறை செயல்படும் நிலையிலேயே, அவா்களின் பிரச்னைகளுக்கு முழுமையாகத் தீா்வு காண இயலாத நிலை உள்ளது.
இந்த நிலையில், ஓய்வூதிய இயக்குநரகத்தையும், சிறுசேமிப்பு இயக்குநரகத்தையும், கருவூலக் கணக்குத் துறையுடன் இணைக்க அரசு முடிவெடுத்திருப்பது வேதனைக்குரியது. தமிழக அரசின் இந்த முடிவு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதில் திமுக அரசுக்கு துளியும் விருப்பமில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.
போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கருவூலக் கணக்குத் துறை ஊழியா்கள் ஏற்கெனவே கடுமையான பணிச் சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், கூடுதலாக 2 துறைகளின் பணிகளையும் அவா்கள் ஏற்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.
எனவே, ஓய்வூதியத் துறை, சிறுசேமிப்புத் துறையை கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், அரசுத் துறைகளை சீரழிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றனா் அவா்கள்.