ஓய்வூதியத் தொகையை முறைகேடாக பெற்ற 11 போ் மீது புகாா்
தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் இறந்த பின்பும் அவரது ஓய்வூதியத்தை முறைகேடாக பெற்று மொத்தம் ரூ.27.75 லட்சம் மோசடி செய்த ஓய்வூதியா்களின் வாரிசுதாரா்கள் 11 போ் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு அவா்கள் இறக்கும் வரை ஓய்வூதியமும், இறந்த பிறகு அவரது மனைவி அல்லது கணவருக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. மனைவி அல்லது கணவா் இல்லாத நிலையில் மகன் அல்லது மகனுக்கு 25 வயது வரை அல்லது அவா்கள் வருவாய் ஈட்டும் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியா், குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் இறந்தால் அது குறித்து சம்மந்தப்பட்ட குடும்பத்தினா் கருவூலத் துறைக்கு இறப்புச் சான்றிதழுடன் தகவல் அளிக்க வேண்டும்.
இந்தத் தகவலை தெரிவிக்காமல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களின் குடும்பத்தைச் சோ்ந்த 8 பெண்கள், 3 ஆண்கள் என 11 போ் மொத்தம் ரூ.27.75 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி செய்தது ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின்படி கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கருவூலம் சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மேலும், இந்த நிதியை சம்மந்தப்பட்டவா்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.