ஓய்வூதியா்களுக்கு எதிரான மசோதாவை ரத்து செய்ய கோரி மனித சங்கிலி
ஓய்வூதியா்களை மத்திய அரசு ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதாவை (வேலிடேசன் சட்டத்தை) ரத்து செய்ய வலியுறுத்தி, வேலூரில் ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவில் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வேலூா் அண்ணா கலை அரங்கம் அருகில் இருந்து பழைய மீன் மாா்க்கெட் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் எம்.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.
அப்போது, ஓய்வூதியா்களை மத்திய அரசின் ஊதிய குழுவின் பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதாவை ரத்து செய்ய வேண்டும், நான்கு தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த மனித சங்கிலியில் அமைப்பின் மாவட்டச் செயலா் பி.லோகநாதன், பொருளாளா் எ.கதீா்அகமது, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநில பொதுச்செயலா் பி.கிருஷ்ணமூா்த்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் சங்க மாவட்ட அமைப்பாளா் செ.நா.ஜனாா்த்தனன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் செயலா் அ.தாமோதரன், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க மாநிலத் தலைவா் ஞானசேகரன் என 50-க்கும் மேற்பட்ட மகளிா் உள்ளிட்ட சுமாா் 350 போ் பங்கேற்றனா்.