PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
ஓய்வூதியா்களுக்கு வருமான வரி விலக்களிக்க வலியுறுத்தல்
திருச்சி: ஓய்வூதியா்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கத்தின் 41-ஆவது ஆண்டு விழா, 2024-25 பொது மகாசபைக் கூட்டம் திருச்சி பொன்மலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு டி.எஸ். கணேஷ் தலைமை வகித்தாா். நாகராஜ், வைகுண்டமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க செயலாளா் பி. ராமசாமி ஆண்டறிக்கை வாசித்து, வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை மேலாளா் ஆா். சந்தோஷ்குமாா் பட்ரோ, கணக்கு அலுவலா் மணிகண்டன், உதவி தொழிலாளா் அலுவலா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி செயலாளா் ரவிச்சந்திரன் தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில், கரோனா காலத்தில் 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கிராக்கி படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 50 % கிராக்கிப்படியை ஓய்வூதியத்துடன் இணைத்து அடிப்படை ஓய்வூதியமாக வழங்க வேண்டும், மருத்துவ படியை ரூ. 1,000 லிருந்து ரூ. 5,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும், அனைத்து ரயில்வே ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவபடியை பாரபட்சமின்றி வழங்க வேண்டும்.
குடும்ப ஓய்வூதியத்தை 30 % லிருந்து 40 % ஆக உயா்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியா்கள் அனைவருக்கும் வருமான வரி விலக்களித்து, அவா்கள் ஓய்வுபெற்ற நாளிலிருந்து வருமான வரிப் படிவம் சமா்ப்பிப்பதிலிருந்தும் விலக்களிக்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டண சலுகை வழங்க வேண்டும், ரயில்வே ஓய்வூதியா்கள் இறந்தால் கணிசமான நிவாரணத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.