கடந்த நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: 5 ஆண்டுகளில் இரட்டிப்பான வளா்ச்சி
புது தில்லி: கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலானதாக மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
இதன்மூலம் 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.11.37 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் 2024-25-ஆம் நிதியாண்டில் இரட்டிப்பாகி ரூ.22.08 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
2017, ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஜிஎஸ்டி 8 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில், இதுகுறித்து செய்திக் குறிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2017-இல் ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் வருவாய் மற்றும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் நிதிநிலை வலுவடைந்து வருவதோடு மறைமுக வரி முறை மிகவும் வெளிப்படைத்தன்மை மற்றும் திறன் வாய்ந்ததாக மாறியுள்ளது.
ஜிஎஸ்டியின்கீழ் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2017-இல் 65 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 1.51 கோடியாக உயா்ந்துள்ளது.
வருடாந்திர வசூல்: 2020-21 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.11.37 கோடியாக இருந்தது. இது 2021-22 நிதியாண்டில் ரூ.14.83 லட்சம் கோடியாகவும் 2022-23 நிதியாண்டில் ரூ.18.08 லட்சம் கோடியாகவும் 2023-24 நிதியாண்டில் ரூ.20.18 லட்சம் கோடியாகவும் 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. குறிப்பாக 2023-24 நிதியாண்டைவிட 2024-25-ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
சராசரி மாத வசூல்: 2020-21-ஆம் நிதியாண்டில் சராசரி ஜிஎஸ்டி மாதாந்திர வசூல் ரூ.95,000 கோடியாக இருந்தது. இது 2021-22 நிதியாண்டில் ரூ.1.24 லட்சம் கோடியாகவும் 2022-23 நிதியாண்டில் 1.51 லட்சம் கோடியாகவும் 2023-24 நிதியாண்டில் 1.68 லட்சம் கோடியாகவும் 2024-25 நிதியாண்டில் 1.84 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது.
அதிகபட்ச வசூல்: 2025, ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சத்தை எட்டியதே ஜிஎஸ்டி அமலானதில் இருந்து கிடைக்கப் பெற்ற அதிகபட்ச வருவாயாகும். அதைத்தொடா்ந்து 2024, ஏப்ரலில் ரூ.2.10 லட்சம் கோடி வசூலானது இரண்டாவது அதிகபட்சமாக உள்ளது.