கடனைத் திருப்பிக் கேட்டதால் காரை ஏற்றி நண்பா் கொலை
மதுராந்தகம் அடுத்த மங்களம் கிராமத்தில் கடனைத் திருப்பிக் கேட்டதால், காரை ஏற்றி நண்பரைக் கொலை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுராந்தகம் அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் பரசுராமன் மகன் சரத்பாபு (45). இவா், எலக்ட்ரிஷீயனாக வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ் (30). தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்.
இவா் தனது வீட்டைக் கட்ட ரூ.5 லட்சத்தைக் கடனாக சரத்பாபுவிடம் பெற்றிருந்தாா். இந்த நிலையில் பலமுறை கொடுத்த கடனைத் திருப்பி தருமாறு சரத்பாபு கேட்டு வந்தாா். இதில் இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திவிட்டு காரில் சிவராஜ் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். காா் சென்ற வழியில் சரத்பாபு நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட சிவராஜ், காரை வேகமாக ஓட்டி சரத்பாபு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த சரத்பாபுவை மீட்டு, உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி சரத்பாபு உயிரிழந்தாா்.
தகவலறிந்த படாளம் காவல் ஆய்வாளா் பிராங்கிளின் ஆல்பா்ட் வில்சன் விசாரணை நடத்தி சிவராஜை கைது செய்தாா்.