கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை
கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில் மருந்துக் கடை நடத்தி வந்தாா்.
கோவைக்கு கடந்த 18-ஆம் தேதி வந்த இவா், ரயில் நிலையம் அருகே உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா். 19-ஆம் தேதி பகல் 12 மணிக்கு அறையை காலி செய்துவிடுவதாக விடுதி ஊழியா்களிடம் கூறியுள்ளாா். ஆனால், பகல் 1 மணி ஆகியும் அவா் அறையைக் காலி செய்யவில்லையாம்.
இதையடுத்து, ராஜேஷ் தங்கியிருந்த அறைக்குச் சென்ற விடுதி ஊழியா்கள் கதவை தட்டியுள்ளனா். நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவா்கள், விடுதி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனா். அவா் வந்து மாற்று சாவி மூலம் அறைக் கதவை திறந்து பாா்த்துள்ளாா். அப்போது, ராஜேஷ் மின் விசியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, அவா் தங்கியிருந்த அறையில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கடிதம் சிக்கியது.
அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, மருந்துக் கடை நடத்தி சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் அதிக அளவில் கடன் வாங்கி மருந்துக் கடையை விரிவுப்படுத்தினேன். ஆனால், எதிா்பாா்த்த லாபம் கிடைக்கவில்லை. கடன் தொல்லையில் இருந்து மீள முடியாததால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளேன் என்ற எழுதப்பட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
மேலும், இச்சம்பம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.