கடலூர்: `அவர் எனக்கும் புருஷன்தான்...’ - கணவரை உரிமை கொண்டாடிய அக்காவை கொலை செய்த தங்கை
கடலூர் சோழத்தரம் கிராமத்தை சேர்ந்தவர் மேகலைவன். இவருக்கு சரிதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். சரிதாவின் மூத்த சகோதரியான சங்கீதாவும் அதே பகுதியில்தான் வசித்து வந்தார். சங்கீதாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். கணவர் இல்லாத சங்கீதாவுக்கு மேகலைவன் அவ்வப்போது சில உதவிகளை செய்து வந்திருக்கிறார்.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. அதனால் இருவரும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். இவர்களின் காதல் சரிதாவுக்கு அரசல்புரசலாக தெரிய வந்ததால், கணவரையும், தன்னுடைய அக்காவையும் கண்டித்திருக்கிறார்.

ஆனால் அதன்பிறகு இருவரும் காதலை தொடர்ந்திருக்கிறார்கள். அதனால் அவ்வப்போது சங்கீதாவுக்கும், மேகலைவனுக்கும் வாக்குவாதம் நடைபெற்று வந்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் மேகலைவனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார். அதனால் சரிதாவுக்கு தெரியாமல் மருத்துவமனையில் மேகலைவனை சந்தித்த சங்கீதா, அவருக்கு தேவையான உதவிகளை செய்திருக்கிறார்.
அது சரிதாவுக்கு தெரிய வந்திருக்கிறது. அதில் கோபமடைந்த அவர், நேற்று முன் தினம் இரவு தன்னுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு அக்கா சங்கீதாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். சங்கீதா கதவை மூடிக் கொண்டு வீட்டினுள் இருந்ததால், கதவை திறக்குமாறு சத்தம் போட்டிருக்கிறார் சரிதா.
அதில் பயந்து போன சங்கீதா கதவை திறக்கவில்லை. அதனால் சரிதாவின் மகன்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். தொடர்ந்து அங்கிருந்த சங்கீதாவை மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். அப்போது சங்கீதாவின் புடவையால் அவரின் கழுத்தை நெரித்தார் சரிதா. சரிதாவிடம் இருந்து தன்னை விடுவிக்க நீண்ட நேரம் போராடிய சங்கீதா, மயங்கி விழுந்தார்.
அதையடுத்து சரிதா தன்னுடைய மகன்களுடன் அங்கிருந்து தப்பிவிட்டார். சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சங்கீதா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்துப் பேசிய விசாரணை அதிகாரிகள், ``சங்கீதாவுக்கும், மேகலைவனுக்கும் இருந்த தொடர்பு தெரிந்து சரிதா கண்டித்திருக்கிறார். அதன்பிறகும் இருவரும் சந்திப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த வாக்குவாதத்தில்தான் மேகலைவனின் காலை உடைத்திருக்கிறார் சரிதா. அப்போது ஏற்பட்ட எலும்பு முறிவுக்காகத்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார் மேகலைவன்.
அங்கு சங்கீதா சென்றதால் கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார் சரிதா. அதனால்தான் அக்கா என்றும் பார்க்காமல் கொலை செய்திருக்கிறார். மேலும் மேகலைவனும், சங்கீதாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்றும் கூறியிருக்கிறார் சரிதா. சரிதாவையும், அவரது மகன்களையும் கைது செய்திருக்கிறோம். விசாரணை முடிவில்தான் முழு உண்மையும் தெரிய வரும்” என்றனர்.