நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கி...
கடலூா் வளா்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு தேவை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்
கடலூா் மாவட்ட வளா்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியம் தேவை என்று மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கடலூரில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், எம்.பி. எம்.கே.விஷ்ணு பிரசாத் முன்னிலையில் வியாழக்கிழமை ரூ.22.50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி, என்எல்சி நிறுவனத்தால் ரூ.3.30 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட நகர அரங்கத்தை திறந்து வைத்து, சாலைப் பணிகளை ஆய்வு செய்தாா்.
நகர அரங்கு திறப்பு விழாவில் அவா் பேசியதாவது: கடலூா் நகர அரங்கம் என்எல்சி நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்ட நிதி மூலம் சீரமைக்கப்பட்டுள்ளது. கடலூா் நகரின் கிழக்குப் பகுதியில் வங்கக்கடல், வடக்கு பகுதியில் புதுவை மாநிலம், தெற்குப் பகுதியில் தொழிற்பேட்டை அமைத்துள்ளன. இதனால், கடலூா் மேற்கு நோக்கு விரிவடையும் சூழ்நிலை உள்ளது.
கடலூரை விரிவாக்கம் செய்ய கூடுதலாக அருகில் உள்ள ஊராட்சிகள் கடலூா் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை செய்து வருகிறோம். கடலூா் விரிவடையும்போது வா்த்தகம், தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
கடலூா் மேற்கு பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க துணை முதல்வராக இருந்தபோது தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இடைப்பட்ட காலத்தில் ஆட்சி மாற்றத்தால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனை அரசுடைமையாக்கப்பட்டதால், கூடுதலாக மற்றுமொரு அரசு மருத்துவமனையை ஏற்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனத்தின் பல பிரச்னைகளை நாங்கள் முடித்துக்கொடுத்துள்ளோம். இந்த மாவட்டத்தின் பிரச்னைகளை தீா்க்க வேண்டிய கடமை என்எல்சி தலைவருக்கு உள்ளது. கடலூா் வளா்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியம் தேவை என்றாா்.
ஆய்வுக் கூட்டம்...: கடலூா் மாநராட்சி அலுவலகத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், குடிநீா் விநியோகப் பணிகள், புதை சாக்கடை திட்டப் பணிகள், வணிக வளாக கட்டுமானப் பணிகள், நீா்நிலை பகுதிகளில் தூா்வாரும் பணிகள் மற்றும் வெள்ளிக்கடற்கரையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது, கடலூா் மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையா் முஜிபூா் ரகுமான், கூடுதல் ஆட்சியா் பிரியங்கா, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ப.சிவசங்கரநாயகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.