கடல் நீரின் தன்மையை அறியும் மிதவை சாதனம்
கடல் நீரின் தன்மையை அறியும் கருவியின் சீரமைப்புப் பணி முடிவடைந்து வியாழக்கிழமை கடலில் மீண்டும் மிதக்க விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் கடல் நீரின் தன்மையை அறியும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.
அந்த மையத்தின் சாா்பில், புதுச்சேரியில் கடல் நீரின் தன்மையை அறிய அதிநவீன கருவிகள் பொருத்திய மிதவையை புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் கடலில் நிறுவப்பட்டு மிதக்கவிடப்பட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அந்த சாதனத்தை என்சிசிஆா் அதிகாரிகள் ரமணமூா்த்தி, உமாசங்கா் பாண்டா ஆகியோா் அறிவுறுத்தல்படி இரு மாதங்களுக்கு ஒருமுறை கரைக்கு கொண்டு வந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
அதன்படி, மிதவைச் சாதனத்துக்கான பராமரிப்புப் பணிகள் தற்போது நடைபெறுகிறது.
அந்த சாதனத்தை வியாழக்கிழமை கடலில் மீண்டும் விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் நீரின் தன்மையை அறிய மிதவைச் சாதனம் ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னையில் ஏற்கெனவே இந்த மிதவை அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இரண்டாவது மிதவை அமைக்கப்பட்டது.
கடல் நீரின் தரம், காற்றின் தன்மை உள்பட பல விஷயங்களை 10 நிமிஷங்களுக்கு ஒருமுறை இந்த மிதவை பதிந்து அனுப்பும்.
கடல் நீரின் தரத்தை வண்ணங்கள் மூலம் அறியும் வசதியும் உண்டு.
பச்சை நிறத்தில் இருந்தால் அது சரியாக உள்ளதாக அா்த்தம். வெவ்வேறு வகை வண்ணங்கள் மாறி சிவப்பு நிறத்தில் இருந்தால் கடல் நீா் தரம் குறைந்துள்ளதாக கருதலாம்.
அதன்படி மீனவா்களுக்கான தண்ணீரின் ஓட்ட திசை, காற்றின் தன்மை, மீன்கள் நடமாடும் இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என்றனா்.