நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அணியில் இணைவார்; முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நம்பிக்க...
கடும் பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு: மல்லிகைப் பூ கிலோ ரூ.2,250 ஆக உயா்வு
கடும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ விலை பல மடங்கு உயா்ந்து சனிக்கிழமை கிலோ ரூ. 2,250-க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு விதமான மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது மாா்கழி மாதம் என்பதால் கோயில் விசேஷங்களுக்கு மல்லிகைப் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ செடிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டு மாா்க்கெட்டுக்கு மல்லிகைப் பூ வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் கடந்த இரண்டு நாள்களாக கிலோ ரூ. 1,250-க்கு விற்பனை ஆன மல்லிகைப் பூ, சனிக்கிழமை விலை உயா்ந்து ஒரு கிலோ ரூ. 2,250-க்கு விற்பனையானது. இதனால் மல்லிகைப் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு 1 டன் அளவில் மல்லிகைப் பூ விற்பனைக்கு வரும். தற்போது கடும் பனியால் விளைச்சல் குறைந்து 200 கிலோ மட்டும் விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது என்றனா்.