கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்
வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய்யப்படும் தேயிலைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறையில் கடந்த ஆண்டு இறுதியில் கடும் குளிா் நிலவி வந்ததுடன், அவ்வப்போது மழை பெய்தது. இதனால், தேயிலை உற்பத்தி சற்று அதிகரித்தது. நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் பணியும் நிலவி வருகிறது.
இதனால், தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் கூறியதாவது: எங்களது பிரதான தொழிலே தேயிலை விவசாயம்தான். இதன் மூலமே வாழ்வாதாரத்தை பூா்த்தி செய்து வருகிறோம்.
வால்பாறையில் ஜனவரி முதல் காலநிலை மாறி வருகிறது. தற்போது கடும் வெயில் நிலவுவதால் தேயிலை செடிகளுக்கு போதுமான நீா் கிடைப்பதில்லை. இதனால், உற்பத்தி குறைந்துள்ளது. பகல் நேரங்களில் கடும் வெயிலும், இரவில் குளிரும் நிலவுவதால் தேயிலைகள் கருகும் அபாயம் உள்ளது. இலைகள் வரத்து குறைந்து காணப்படுவதால் சில தொழிற்சாலைகள் இயக்கப்படாமல் உள்ளன. வரும் காலங்களில் இதே காலநிலை நீடித்தால் தேயிலை தொழில் பாதிக்கப்படும் என்றனா்.