கட்டி முடிக்கப்பட்ட அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கட்டி முடிக்கப்பட்ட அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், அத்திகுளம், செங்குளம் ஊராட்சிக்குள்பட்ட சின்ன அத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு கட்டடத்திலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை மற்றொரு கட்டடத்திலும் இயங்கி வந்தது.
இதில் ஒரு கட்டடம் சேதமடைந்ததால், கடந்த 2021-ஆம் ஆண்டு அது இடிக்கப்பட்டது. இதனால் மாணவா்கள் ஒரே கட்டடத்தில் இட நெருக்கடியில் கல்வி பயின்று வருகின்றனா். இதனிடையே, இரு ஆண்டுகள் கழித்து கட்டுமானப் பணி தொடங்கி நிறைவடைந்தது. வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாததால் மாணவா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
எனவே, இந்தக் கட்டடத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.