கெத்து தினேஷின் புதிய படம்: போஸ்டர் வெளியிட்டு பொங்கல் வாழ்த்து!
கண்காணிக்கும் விசாரணை அமைப்புகள்... ஈரோட்டில் ரூட் போடும் அண்ணாமலை!
ஈரோடு கிழக்கு - இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க எனப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. நாம் தமிழர் கட்சி மட்டுமே தி.மு.க-வை எதிர்த்துக் களமாடுகிறது. தி.மு.க வேட்பாளர் சந்திரகுமாருக்கு எதிராக, சீதாலட்சுமி என்பவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. இதற்கிடையே, 'இடைத்தேர்தலில் போட்டியில்லை' என்பதை அறிவித்திருக்கும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவரான அண்ணாமலை, "ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், கடந்த இடைத்தேர்தலின்போது தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறி தி.மு.க செயல்பட்டதை நாம் அனைவருமே பார்த்தோம். இந்த இடைத்தேர்தலில், மீண்டும் கால்நடைகளை போல பொதுமக்களை அடைத்து வைக்க தி.மு.க-வை அனுமதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி விரும்பவில்லை" என அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிடவில்லை என்றாலும், தி.மு.க-வுக்கு எதிரான சில நகர்வுகளைச் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள் கமலாலயத்தினர்.
அதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர்கள் சிலர், "வழக்கமாக, எந்த இடைத்தேர்தலையும் பா.ஜ.க புறக்கணிப்பதில்லை. ஒருசில நிகழ்வுகளில் மட்டும்தான், சரியான காரணங்களின் அடிப்படையில் புறக்கணிப்பு முடிவை டெல்லி கட்சித் தலைமை எடுக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான விவாதம் எழுந்தபோது, அண்ணாமலையும் தமிழிசை செளந்திரராஜனும் 'வேட்பாளரை நிறுத்த வேண்டும்' என கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் வாதிட்டனர். ஆனால், மாநில மையக்குழுவில் இருந்த பெரும்பாலான தலைவர்கள், 'வேட்பாளரை நிறுத்தினால் டெபாஸிட் கூட வாங்க முடியாத நிலை வந்துவிடலாம். பணத்தை ஆறாக ஓடவிட்டு நம்மை தி.மு.க காலி செய்துவிடும். பெரும்பாலான எதிர்க்கட்சிகளையும் போல நாமளும் புறக்கணித்துவிடலாம்' என ஆலோசனையளித்தனர். அவர்களுடைய ஆலோசனையை ஏற்று, 'புறக்கணித்துவிடலாம்' என டெல்லிக்கு நோட் அனுப்பினார் அரவிந்த் மேனன். அதைத்தொடர்ந்தே அறிவிப்பு வெளியானது.
அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, இரண்டு ஆலோசனைகளை அரவிந்த் மேனனிடம் முன்வைத்தார் அண்ணாமலை. அதாவது, 'தேர்தல் பணிமனைகளில் பொதுமக்களை அடைத்துவைத்து பரிசுப்பொருள் விநியோகம், பண விநியோகத்தில் தி.மு.க-வினர் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. போட்டியே இல்லாத சூழல் இருப்பதால், வீடு வீடாகக்கூட பரிசுப் பொருள் விநியோகத்தை தி.மு.க-வினர் தைரியமாகச் செய்வார்கள். ஆகவே, வருமானவரித்துறை, தேர்தல் செலவினங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளைவிட்டு, தி.மு.க செய்யும் விநியோகத்தையெல்லாம் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அபரிமிதமாகப் பரிசுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டால், தேர்தல் ரத்தாவதற்கு அதுவே காரணமாகவும் அமைந்துவிடும். தி.மு.க அம்பலப்பட்டுப் போகும்.
இந்த இடைத்தேர்தலுக்கும் வார்டு வாரியாக அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப் போகிறது தி.மு.க தலைமை. 'ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற வேண்டும்' என இலக்கும் நிர்ணயித்திருக்கிறார்கள். எந்த வார்டில் அதிகமாகப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதோ, அந்த வார்டுக்குப் பொறுப்பான அமைச்சரைக் கண்டறிந்து, அவர் பற்றிய விவரங்களை நாம் திரட்ட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில், அந்த அமைச்சருக்கு நெருக்கடி கொடுத்தால், தேர்தல் பணியில் சுணங்கிவிடுவார்' என மேனனுக்கு ஆலோசனை அளித்திருக்கிறார் அண்ணாமலை.
அவருடைய ஆலோசனையை மேலிடத்திடம் மேனன் கொண்டுபோய் சேர்க்கவும், வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கண்காணிப்பை பலப்படுத்தச் சொல்லியிருக்கிறது டெல்லி. இடைத்தேர்தல் பணிக்காக தேர்தல் செலவினங்கள் பார்வையாளர், பொதுப் பார்வையாளர், காவல்துறை செயல்பாடு பார்வையாளர் என மூன்று பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமிக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு வலுவான ஆட்களையே பார்வையாளர்களாக நியமிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. 'களத்தில் போட்டியே இல்லை' என தி.மு.க சொல்லிக் கொண்டாலும், டெல்லியின் கண்காணிப்பு வளையத்திற்குள் அவர்கள் சிக்கியே இருக்கிறார்கள்" என்றனர்.
ஏப்ரல் 2017-ல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானபோது, அபரிமிதமான பணப்பட்டுவாடா புகார் காரணமாக அந்தத் தேர்தல் ரத்துச் செய்யப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரித்துறையின் சோதனைகூட நடத்தப்பட்டது. அதுபோன்ற பரபரப்புகளை அடுத்த 15 நாள்களுக்குள் உருவாக்கவே பா.ஜ.க தரப்பு முயற்சிப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs