கந்தா்வகோட்டை வட்டத்தில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு
கந்தா்வகோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வேளாண் திட்டப்பணிகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநா் மு.சங்கரலட்சுமி சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா்.
நடப்பு நிதி ஆண்டு 2025-26-இல் வேளாண் நிதிக் கொள்கையில் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் (டெல்டா அல்லாத மாவட்டங்கள்) வெள்ளாளவிடுதி வருவாய் கிராமத்தில் இயந்திர நடவு செய்யப்பட்டுள்ள நெல் வயல்களை கள ஆய்வு மேற்கொண்டாா். மேலும் குறுவை தொகுப்புத் திட்ட இடுபொருள்கள் மற்றும் உளுந்து மினி கிட் விதைகளை வெள்ளாளவிடுதி துணை வேளாண்மை விரிவாக்கக் கிடங்கிலிருந்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்தாா்.
சுந்தம்பட்டி வருவாய் கிராமத்தில் கோடை உழவு மேற்கொள்ளப்பட்டுள்ள வயல்கள் மற்றும் கோடைகால பயிா் சாகுபடி திட்டத்தின் கீழ் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களை ஆய்வு மேற்கொண்டாா். மேலும் நடப்பு ஆண்டுக்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் காட்டுநாவல் வருவாய் கிராமத்தில் மண்மாதிரி சேகரித்தல் பணியைத் தொடங்கிவைத்தாா்.
ஆய்வின்போது கந்தா்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) எஸ்.அன்பரசன் , வேளாண்மை அலுவலா் செல்வன், விக்னேஷ், உதவி வேளாண்மை அலுவலா் கமலி மற்றும் பயிா் அறுவடை பரிசோதனை அலுவலா் சாமியப்பா ஆகியோா் உடனிருந்தனா்.