செய்திகள் :

கனடாவின் அடுத்த பிரதமர் யார்? - வரிசைகட்டும் ‘தலை’களும் தலைவலிகளும்!

post image

9 ஆண்டுகள் கனடாவின் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். உட்கட்சி பிரச்னை, ஊழல் புகார்கள், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான மோதல் போக்கு என தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த விலகல், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. எனினும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை தற்போதைய பதவியில் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பதே பலரும் முன்வைக்கும் கேள்வி. ட்ரூடோவின் லிபரல் கட்சி இப்போது பொதுத் தேர்தலில் போட்டியிட ஒரு புதிய தலைவரைக் தேட வேண்டும். வரும் மார்ச் 9-ஆம் தேதி இதற்கான வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

ட்ரூடோவின் விலகலையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ ட்ரூடோவின் வழியில் தானும் அரசியலை விட்டு விலகி தனது முந்தைய ஆசிரியர் பணிக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

அனிதா ஆனந்த்

அனிதாவைத் தொடர்ந்து நிதியமைச்சர் டொமினிக் லெப்ளாங்க், வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் தொழில் துறை அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் ஆகியோரும் தங்கள் தற்போதைய கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி பிரதமர் போட்டியிலிருந்து நழுவி விட்டனர்.

எனினும், தற்போது லிபரல் கட்சியின் தலைவர் / கனடா பிரதமருக்கான போட்டியில் இருப்பவர்கள் குறித்து பார்ப்போம்:

59 வயதாகும் மார்க் கார்னி கனடாவின் வடமேற்கு பகுதியில் பிறந்து ஆல்பர்ட்டாவின் எட்மண்டனில் வளர்ந்தவர். கனடா மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றிய இவர், கடந்த சில மாதங்களாக ட்ரூடோவின் சிறப்பு பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வருகிறார். ட்ரூடோவும் கார்னியை தனது அணியில் சேர்க்க நீண்ட காலமாக முயற்சித்து வந்ததாக கூறியிருந்தார்.

இன்னொரு புறம் ட்ரூடோவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்தவர் மார்க் கார்னி. பிரதமரும் அவரது அமைச்சர்களும் பொருளாதார பிரச்னைகளிலிருந்து தங்கள் கவனத்தை அடிக்கடி திசை திருப்பி விடுகின்றனர் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார் கார்னி.

Mark Carney

ஒருவேளை மார்க் கார்னி வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலுக்கு நாட்டை தயார்படுத்தும் பொறுப்பு அவருடையதாக இருக்கும். ஏற்கெனவே பல்வேறு கருத்துக்கணிப்புகள் தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி அடையும் என்று கூறும் நிலையில், அந்த சவாலை எதிர்கொள்ள கார்னி தயாராக வேண்டும்.

முன்னாள் துணை பிரதமரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் டொராண்டோ நாடாளுமன்ற உறுப்பினரும் ட்ரூடோவின் அணியின் மிகவும் பிரபலமான உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். மேலும் பிரதமர் பதவிக்கான சிறந்த போட்டியாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

கடந்த வியாழக்கிழமையே மார்க் கார்னி தனது பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வரக்கூடிய நாட்களில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக ட்ரூடோவின் நெருங்கிய வட்டத்தில் நம்பகமான மூத்த அதிகாரியாக இருந்த ஃப்ரீலேண்ட், பிரதமர் அலுவலகத்துடனான விரிசல் காரணமாக டிசம்பரில் திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தில் ட்ரூடோ குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.

Chrystia Freeland

56 வயதாகும் க்றிஸ்டியா ஃப்ரீலேண்ட் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராக பணியாற்றியவர். 2019 முதல் 2024 வரை கனடாவின் துணை பிரதமராக பதவி வகித்தார். கனடாவின் முதல் பெண் துணை பிரதமர் மற்றும் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றவரும் இவரே. உக்ரைனுக்கு அவர் அளித்த உறுதியான ஆதரவு பாராட்டுகளைப் பெற்றது. ஆனால், சமீபத்தில் டொனால்டு ட்ரம்ப் அவரை ‘நச்சுத்தன்மை கொண்டவர்’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஒருவேளை ஃப்ரீலேண்ட் லிபரல் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரேவை எதிர்கொள்ள வேண்டும்.

முன்னாள் வர்த்தக மற்றும் முதலீட்டு நிபுணரான கரினா கோல்ட், தான் லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இளம் தலைமுறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று அறிவித்து, பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளார்.

முதன்முதலில் 2015-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ட்ரூடோவின் அமைச்சரவையில் பல பதவிகளை வகித்துள்ளார். கனடாவில் அமைச்சராகப் பணியாற்றிய முதல் இளம் பெண்மனி என்ற பெயரை தக்க வைத்தவர் 37 வயதாகும் கரினா கோல்ட்.

karina Gould

குடும்பநல அமைச்சராகவும், சர்வதேச மேம்பாட்டு அமைச்சராகவும், ஜனநாயக அமைப்புகள் துறையின் அமைச்சராகவும் பணியாற்றினார் கரினா. தற்போது அவைத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசாங்கத்தின் சட்டமன்ற நிகழ்வுகளை மேற்பார்வையிடுகிறார்.

அட்லாண்டிக் மாகாணமான நோவா ஸ்கோடியாவைச் சேர்ந்த மிக்மாவ் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெய்ம் பாட்டிஸ்டே, முதன்முதலில் 2019ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பழங்குடியினத்தை சேர்ந்த ஜெய்மே, பூர்வக்குடி மக்களிடமிருந்தும், தலைவர்களிடமிருந்தும் தனக்கு அபரிமிதமான ஆதரவு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் நாட்டின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பது குறித்த தனது தொலைநோக்குப் பார்வை தனது பிரசாரத்தில் முன்வைத்து வருகிறார் ஜெய்மே.

Jaime Battiste

வாக்கெடுப்பில் வெற்றிபெற்றால் கனடாவின் பிரதமராக பதவியேற்கும் முதல் பழங்குடியின தலைவர் என்ற பெருமையை பெறுவார் ஜெய்மே.

எனினும் பிரதமர் போட்டிக்கான நுழைவுத் தொகை $350,000 தான் இன்னும் திரட்ட வேண்டியிருப்பதாகவும், தன்னிடம் இதுவரை $60,000 இருப்பதாகவும் ஜெய்மே கூறுகிறார். தனக்கு ஆதரவாக பழங்குடியின தலைவர்கள் பலரும் தொகைக்கான இலக்கை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கூறுகிறார். ஜனவரி. 23-க்குள் அவர் இந்த தொகையை திரட்டி ஆக வேண்டும்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் கர்நாடகாவைச் சேர்ந்தவருமான சந்திரா ஆர்யா கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் முதலில் களமிறங்கியவர்.

கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்யா 20 ஆண்டுகளுக்கு முன்பு கனடா சென்றவர். வேட்புமனுவை தாக்கல் செய்தபிறகு தனது உரையில், தனது தாய்மொழியான கன்னடத்தில் பேசி கவனம் ஈர்த்தார்.

Chandra Arya

தொடர்ந்து கனடா இந்துக்களுக்கு ஆதரவாகவும், காலிஸ்தானி அமைப்புகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருபவர். நமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், எதிர்கால சந்ததியினருக்கு செழுமையை பாதுகாக்கவும் ஒரு திறமையான அரசாங்கத்தை வழிநடத்தவே தான் போட்டியிடுவதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பியும், தொழிலதிபருமான பிராங்க் பேலிஸ் லிபரல் கட்சி தலைமைக்கான போட்டியில் இருக்கிறார். மான்ட்ரியலில் பிறந்து பிரான்ஸில் படித்த பேலிஸ், கனடியர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளைச் சரிசெய்ய தனது பொறியியல் மூளையை பயன்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய லிபரல் கட்சியிடமிருந்து பேலிஸ் கடைபிடிக்கும் தூரத்தை அவர் தனக்கு சாதகமாகக் கருதுகிறார். காரணம், போட்டியிடவிருக்கும் மற்ற வேட்பாளர்களைப் போல, தன்னை யாரும் ‘மற்றொரு ஜஸ்டின் ட்ரூடோ’ என்று குற்றம்சாட்டி விடமுடியாது என்பது பேலிஸின் வாதம்.

கனடா மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை நிவர்த்தி செய்ய வியாபார உலகில் இருந்து தனது அனுபவத்தைக் பயன்படுத்துவேன் என்றும் பேலிஸ் கூறியுள்ளார். 2015-2019 வரை கனடா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்துள்ளார் பேலிஸ்.

இதுவரை கனடா பிரதமருக்கான போட்டியில் இருப்பவர்களுக்கான பட்டியல். எனினும் ஜனவரி 23 வரை வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புவர்களுக்கு கெடு இருக்கிறது. கெடு முடியும்வரை போட்டியில் வேறு யாரேனும் கனடாவின் முக்கிய ‘தலை’கள் இணைகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`ஆர்.கே.நகர் காவலர்கள் அலட்சியத்தால்...' - தற்கொலை முயற்சி விவகாரத்தில் TTV தினகரன் காட்டம்

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நேற்றிரவு இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த விவகாரத்தில் "புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முன்பாகவே தீக்குளித... மேலும் பார்க்க

TVK : 'கெடுபிடி போலீஸ்; ஆதங்கத்தில் மக்கள்; ஸ்கோர் செய்த விஜய்' - பரந்தூர் விசிட் ஸ்பாட் ரிப்போர்ட்

தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடிய போராட்டக்குழுவை சந்தித்து பேசியிருக்கிறார். பரந்தூர் அருகே பொடவூர் என்கிற கிராமத்திலுள்ள தனியார் மண்டபத்தில் இந்த சந்திப்பு... மேலும் பார்க்க

கிம் ஜாங் உன் நலமா? - நக்கலாக விசாரித்த டொனால்ட் ட்ரம்ப் - இனி வட கொரியா என்னவாகும்?

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப் பின் தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், நக்கலான தொனியில், "கிம் ஜாங் உன் நலமாக இருக்கிறாரா?" என்று விசாரித்தார். என்ன நடந்தது?தென் கொர... மேலும் பார்க்க