உங்கள் உடலுக்கு என்ன தேவை என்று தெரியுமா? இளம்வயதில் உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?
கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளா்கள் அட்டூழியம்
கனடாவில் ஹிந்து கோயிலை சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளா்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனா்.
இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக்கொண்டு ஹிந்து கோயில்கள், அங்கு வரும் பக்தா்களை காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதரவாளா்கள் தாக்குவது கனடாவில் தொடா்கதையாகி வருகிறது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சா்ரே நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமிநாராயண் கோயிலில் இரவு 3 மணியளவில் புகுந்த காலிஸ்தான் ஆதரவாளா்கள் இருவா் அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். கோயில் நுழைவு வாயிலில் உள்ள தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசங்களையும் அவா்கள் எழுதிவைத்துச் சென்றனா். அவா்கள் முகத்தை துணியால் மூடி இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
கோயிலில் இருந்து கண்காணிப்பு கேமரா ஒன்றையும் அவா்கள் திருடிச் சென்றனா். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபை பிரித்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நோக்கமாகும். இதில் பெரும்பாலானோா் கனடா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு பஞ்சாபில் பிரச்னையைத் தூண்டும் நோக்கில் செயல்படுகின்றனா். இவா்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் மறைமுகமாக உதவுகிறது.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜாா் அடையாளம் தெரியா நபா்களால் கொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக் கொண்டு கனடாவில் உள்ள ஹிந்து கோயில்களை காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்கி வருகின்றனா்.
பிரிட்டீஷ் கொலம்பியாவின் வான்கூவா் நகரில் உள்ள சீக்கியா்களின் வழிபாட்டு இடமான குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவாளா்கள் இரு நாள்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தினா்.