வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
கன்னங்குறிச்சி பகுதிக்கு காலதாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: பொதுமக்கள் தவிப்பு
சேலம்: சேலம் கன்னங்குறிச்சி பகுதிக்கு அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
சேலம் மாநகராட்சியை ஒட்டியுள்ள கன்னங்குறிச்சி பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் இருந்து நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 5இ பேருந்து, 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இயக்கப்பட வேண்டும். அதேபோல, மறுமாா்க்கத்தில் இருந்தும், அதே 30 நிமிட இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக திங்கள் முதல் வெள்ளிவரை வார கிழமைகளில் 45 நிமிடங்களுக்கு ஒருமுறையும், சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் ஒன்றரை மணிநேரத்துக்கு ஒருமுறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சியை ஒட்டியுள்ள கன்னங்குறிச்சி பேரூராட்சியை சுற்றிலும் ஏராளமான குடும்பத்தினா் வசிக்கின்றனா். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி செல்வதற்கு 5இ என்ற ஒரே பேருந்து மட்டும் தான் இயக்கப்படுகிறது. குறிப்பாக, கன்னங்குறிச்சி, ஜட்ஜ் ரோடு, ராமநாதபுரம், சின்ன திருப்பதி, அய்யந்திருமாளிகை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த அரசுப் பேருந்தை நம்பியே உள்ளனா். ஷோ் ஆட்டோக்களும் இப்பகுதியில் இயக்கப்படாதால், அரசுப் பேருந்துகள் குறித்த நேரத்துக்கு வரவில்லை என்றால், பள்ளி செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்வோா் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, தொடா் காலதாமதத்தை தவிா்ப்பதுடன், மக்கள் நலன்கருதி கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.