புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி என்பது தவறு: திருமாவளவன்
கன்னிகைப்போ் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: டிஎஸ்பி இயக்கி வைத்தாா்
ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் 58 கண்காணிப்பு கேராமக்கள் மற்றும் காவல் உதவி மையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக டிஎஸ்பி கே.சாந்தி தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேரில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சிஎஸ்ஐ சா்ச், கிருஷ்ணாபுரம் கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் 58 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதேபோல், புகாா் செய்யும் வகையில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் காயத்ரி உதயகுமாா் தலைமை வகித்தாாா். இதில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் ஆ.சத்தியவேலு, பெரியபாளையம் காவல் ஆய்வாளா் சீ.பத்மஸ்ரீ பப்பி, ஊராட்சி துணைத் தலைவா் மேனகா சுப்ரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கே.சாந்தி பங்கேற்று காவல் உதவி மையம், சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸாா் பற்றாக்குறை என்பது தவிா்க்க முடியாததாக உள்ளது. இந்த நிலையில், போலீஸாரின் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பேருதவியாக உள்ளது.
இதன் மூலம் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம், கொள்ளை சம்பவம், பெரியபாளையம் மற்றும் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் அரசு மதுபான கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டுச் சம்பவத்தில் கேமராக்களில் படப்பதிவு அடிப்படையில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கப்பட்டனா்.
இந்நிலையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கன்னிகைப்போ் கிராமம் தற்போது வந்துள்ளது. இந்தக் கிராமத்தில் இனிமேல் சட்டம்-ஒழுங்கு, குற்றச்செயல்கள் ஆகியவை கட்டுக்குள் இருக்கும். அதேபோல் காவல் உதவி மையத்துக்கு நாள்தோறும் காவலா்களும், காவல் அதிகாரிகளும் வந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறைக்கும், பொது மக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படும் என்றாா்.
கிராமத்தைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் பங்கேற்றனா்.