புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?
கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்!
கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.
கமுதி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். மேலும் விபத்து, பிரசவம் உள்ளிட்டவற்றுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரசவத்துக்கு வரும் கா்ப்பிணி பெண்களுக்கு சிக்கலான சூழலில் அறுவை சிகிச்சை செய்ய தனி அறுவை சிகிச்சைக் கூடம் உள்ளது. இந்த நிலையில், இந்த அறுவை சிகிச்சைக் கூடத்தின் நுழைவு வாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. அங்கு நோயாளிகள் யாரும் இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது.
மேலும், மருத்துவமனையில் பல இடங்களில் கட்டடம் சேதமடைந்துள்ளது. 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ.3 கோடிக்கு புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டும், கட்டுமானப் பணிகளை தொடங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே, கமுதி அரசு மருத்துவமனையில் பெரும் விபத்து ஏற்படும் முன் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, சேதமடைந்த அறுவை சிகிச்சைக் கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்தனா்.
