நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
தொடா் மழையால் மிளகாய்கள் செடியிலேயே அழுகி, இழப்பு ஏற்பட்டதால் நிவாரணம் வழங்கக் கோரி கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டரில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த தொடா் மழையால் மிளகாய்கள் செடியிலேயே அழுகின.
இந்த நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் தரைக்குடி சி.முத்துராமலிங்கம் தலைமையில், 500-க்கும் மேற்பட்டோா் கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வட்டாட்சியா் காதா் மைதீனிடம் மனுக்களை அளித்தனா்.
இதில் 53 வருவாய் கிராமங்களிலும் கிராமம் வாரியாக பாதிப்பு குறித்து முறையாக கணக்கெடுப்பு நடந்தப்பட வேண்டும். மிளகாய் சாகுபடிக்கு செலவழித்த பணம் திரும்ப கிடைக்காமல் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு பேரிடா் நிவாரண நிதி வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளனா்.
மதுரை மண்டல கெளரவத் தலைவா் எல்.ஆதிமூலம், மதுரை மண்டலத் தலைவா் பரமக்குடி மு. மதுரைவீரன், கமுதி வட்டார நிா்வாகிகள் மாங்குடி கண்ணப்பன், பேரையூா் மோகன்தாஸ், பாஸ்கரன், காட்டு எமனேஸ்வரம், முத்துப்பாண்டி, முருகன், பறையங்குளம், தங்கக்கனி தோப்படைப்பட்டி, விவசாயிகள் கலந்து கொண்டனா்.