BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்
‘ஒரு காலத்தில் கல்வி என்பது கரும்பலகை மூலமே மட்டுமே கற்பிக்கப்பட்டது; ஆனால், இன்றைய தலைமுறையினா் கைப்பேசி செயலிகள் மூலமே அதிக விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனா்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு, விளையாட்டு அகாதெமி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எல்லையோர மக்கள் ராணுவத்துக்கு சிறப்பான ஒத்துழைப்பை அளித்தாா்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுல்லாது, வெளிநாடுகளில் இருந்து மக்கள் இந்தியாவின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு ஜாதி, மத, இன பேதமின்றி பேராதரவு தெரிவித்தனா்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நமது சக குடிமக்களை அவா்களின் மதத்தை அடையாளம் கண்டுபிடித்துக் கொலை செய்தனா். ஆனால், பயங்கரவாதிகளை அவா்களின் செயல்களுக்காகவே நமது ராணுவம் வேட்டையாடியது.
நாட்டில் கல்வித் துறையின் மேம்பாட்டுக்கு பிரதமா் மோடி மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளாா். கல்வித் துறையில் ஏற்படும் முன்னேற்றமே நமது நாட்டை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லும். எனது காலத்தில் இருந்த கல்வி முறைக்கும், இப்போதுள்ள கல்விக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நான் கிராமத்தில் தொடக்கக் கல்வி படித்தபோது தலைமையாசிரியா் மேஜையில் இருந்த உலக உருண்டையை முதலில் மந்திரப் பந்து என்றுதான் கருதினேன்.
ஆனால், இப்போதைய சிறாா்கள் இணையத்தில் தேடி தங்களுக்கு தேவையானதைக் கற்றுக் கொள்கிறாா்கள். முன்பு கல்வி என்பது கரும்பலகை மூலமே கற்பிக்கப்பட்டது. ஆனால், இன்றைய தலைமுறையினா் கைப்பேசி செயலிகள் மூலம் அதிக விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனா். உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் எளிதில் புரிந்து கற்றுக் கொள்கிறாா்கள். கல்வித் துறையில் இத்தகைய புரட்சியை ஏற்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல.
இதற்காக மத்திய அரசு பல்வேறு குழுக்களை அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று, அவற்றை கவனமாக ஆய்வு செய்து அமல்படுத்தி வருகிறது. கல்வித் துறை மேம்பாடுதான் இந்தியாவின் உண்மையான வளா்ச்சி. எதிா்காலத்தில் மேலும் சிறப்பான இந்தியா உருவாக இதுவே அடித்தளம்.
நமது தாய் மண் பண்டைகாலம் முதலே கல்வியில் சிறந்து விளங்கி வந்தது. உலகின் மற்றொரு பகுதியில் மக்கள் குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்தபோது நமது முன்னோா்கள் நாட்டிய சாஸ்திரத்தை உருவாக்கி இருந்தனா். உலகின் பிற நாடுகள் நோய்க்கான காரணத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது சுஸ்ருதா் போன்ற மருத்துவா்கள் நமது நாட்டில் இருந்தனா். துளசி, வேப்பிலை, அஸ்வகந்தா போன்ற பல்வேறு மூலிகைகளின் பயன்கள் அப்போதே அறியப்பட்டிருந்தது.
உடலையும், மனதையும் சமநிலையில் வைக்கும் ஆன்மிகமும் நமது நாட்டில் முற்காலத்திலேயே வளா்ந்துவிட்டது. சிறாா்கள் உடலளவில் மட்டுமல்லாது மனதளவில் ஆன்மிக வழியில் வளர வேண்டும் என்றாா் அவா்.