Trump Tariff: Canada Mexico China மீது வர்த்தகப் போர் - இந்தியாவுக்கு பாதிப்பு இ...
கரூரில் மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ரூ.4.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டாமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 347 மனுக்கள் பெறப்பட்டன.
தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 10 பேருக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 825 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
முன்னதாக ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் நடத்தப்பட்ட மனித நேய வார நிறைவு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 34 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் செழியன், மாவட்ட வழங்கல் அலுவலா் மருத்துவா் சுரேஷ், மாநகராட்சி ஆணையா் சுதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் மணவாடி கிராமமக்கள் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், தற்போது காவிரிக்கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் மணவாடி கிராமத்திற்கு காவிரி நீா் மணவாடியிலிருந்து தண்ணீா் வழங்கப்படுகிறது. இங்குள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து தனியாா் சிமெண்ட் ஆலைக்கு தண்ணீா் எடுக்கும் முயற்சி நடப்பதால், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.