தமிழ் சினிமாவில் Middle aged மனிதர்களோட கதைகள் வரதேயில்ல! - Thambi Ramaiah | Uma...
கரூர்: `அல்லல்படும் மாணவர்கள்' - ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி; மழை நீரில் சேதமான தற்காலிக பாதை
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது வேங்கடதாம்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள ஆத்துவாரியில் தரைப்பாலம் ஒன்று இருந்தது.
இந்நிலையில், மழை காலங்களில் அந்தத் தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகம் செல்லும்போது, போக்குவரத்து பிரச்னை ஏற்பட்டதால், புதிதாக பாலம் கட்டித் தரச்சொல்லி அந்தப் பகுதி மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனால், அந்தத் தரைப்பாலம் அகற்றப்பட்டு புதிதாக பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், அந்தப் பாலம் கட்டும் பணி மந்த நிலையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதனால், அந்த ஆத்துவாரியை பொதுமக்கள் கடந்து செல்ல அதற்குள் மண்ணை மேடாக்கி தற்காலிகப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. மாணவர்களும், பொதுமக்களும் அந்த தற்காலிக பாலத்தைப் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையில் தற்காலிகப் பாலமாக செயல்பட்ட அந்த மண் பாதை மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது.
மீண்டும் தற்காலிகப் பாதையை ஊராட்சி நிர்வாகம் அமைத்துத் தராததால் அப்பகுதியிலிருந்து பள்ளி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் ஆபத்தை உணராமல் ஆத்துவாரி பள்ளத்தில் இறங்கி கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இதுபற்றி நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள்,
‘கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள புத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கடத்தாம்பட்டியில் இருந்து கீழவெளியூர் செல்லும் சாலையில் இந்த ஆத்துவாரி உள்ளது. இந்த ஆத்துவாரியில்தான் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ தெரியவில்லை, கடந்த இரண்டு மாதங்களாக மேம்பாலப் பணி நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளும், பொது மக்களும் இந்தப் பாலத்தின் வழியாகத்தான் கீழவெளியூர் மற்றும் திருச்சிக்குச் செல்லவேண்டும். இல்லையென்றால் ஐந்து கிலோமீட்டர் சுற்றிதான் செல்ல வேண்டும் அப்படி அவர்கள் செல்ல புதுமேம்பாலம் அமைப்பதற்காகத் தற்காலிக மண்பாதை அமைத்திருந்தனர்.
அந்த மண்பாதை கடந்த சில நாட்களுங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் ஆத்து வாரியில் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு, பொதுமக்களும், மாணவர்களும் அந்த வழியாகச் செல்வதற்கு அந்த ஒப்பந்ததாரரும், பஞ்சாயத்து நிர்வாகமும் மாற்றுப் பாதை அமைக்கவில்லை. இதனால், பொதுமக்களும், பள்ளி மாணவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் வெகு சிரமத்துக்கு ஆளாகிறோம்.
அதோடு, இந்தப் பாலத்தில் மாற்றுப்பாதை இல்லாமல் குழியில் இறங்கிச் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்தப் பாலத்தை விரைந்து கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அல்லது பழையபடி தற்காலிகமாக மாற்றுப்பாதையாவது அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்கள்.
இந்த பிரச்னை குறித்து, தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனிடம் பேசினோம்.
“அந்த தற்காலிக மண் பாதை மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டதால், மாணவர்களும், பொதுமக்களும் அந்த வழியாக செல்வதற்கு சிரமபடுகிறார்கள் என்ற தகவல் என் கவனத்துக்கும் வந்தது. உடனே, குழாய் வைத்து புதிதாக மண்பாதை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். வேலை முடிந்த புகைப்படத்தையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். புதிய பாலம் அமைக்கும் பணியும் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.