கரூர் கொடுந்துயரத்தில் அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்
கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை, பாஜக வெளிப்படையாகத் தொடங்கிவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழுவை திங்கள்கிழமை அமைத்தார்.
இது தொடர்பாக தொல். திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக.
கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.
இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். பாஜக'வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.
எனவே, ராகுல் காந்தி, இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கரூர் சென்ற பாஜக எம்பிக்கள் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!
vidudhalai siruthaigal Thirumavalavan has criticized the BJP for openly starting its political game in the Karur tragedy.