கரூர் சம்பவம்! முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்!
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில், முன் ஜாமீன் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்.27 ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயண பிரசாரக் கூட்டத்தில் அதிகப்படியான மக்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. இதில், 41 பேர் பலியாகினர்.
இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை காணவில்லை என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. மேலும், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் இன்று (செப். 30) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆறுதல்கூட சொல்லாமல் ஒரு தலைவர் சென்றது இதுவரை பார்த்திராத ஒன்று: கனிமொழி கடும் விமர்சனம்