கரூர் சென்ற பாஜக எம்பிக்கள் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!
கரூர் நெரிசல் பலி சம்பவம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!
கரூர் நெரிசல் பலி சம்பவத்தில் மற்றொரு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள காலையில் வருவதாக அறிவித்த விஜய் இரவு 7 மணி அளவில்தான் வந்தார்.
இதனால், ஏராளமான பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என்று நோக்கில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கிய ஒன்றுமரியா 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் போதிய திட்டமிடல், தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தவெக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் தகவலறிக்கைப் பதியப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த், துணைப் பொதுச் செயலர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கரூர் மேற்கு மாவட்டச் செயலர் மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அவரை தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கரூர் மத்திய மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜை காவல் துறையினர் இன்று(செப்.30) காலை கைது செய்தனர்.
கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா தலைமையில் மதியழகன் மற்றும் மாசி பவுன்ராஜ் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தில் அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், கலவரத்தில் ஈடுபடுதல், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நிர்வாகிகள் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் பல நிர்வாகிகள் மீது காவல் துறை நடவடிக்கை பாயும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.