கரூர்: QR Code வழியாக மாணவர்களுக்குத் திருக்குறள்; அரசுப் பள்ளி ஆசிரியரின் அசத்தல் முயற்சி!
காலத்தைக் கடந்தும் உலக மக்கள் அனைவருக்குமான கருத்துகளைத் தாங்கி நிற்கும் நூலாக மிளிர்கிறது திருக்குறள்.
ஓலைச்சுவடி, புத்தகம் என்று காலத்துக்கு ஏற்ப பல வடிவங்களில் அந்த நூல் பதிப்பிக்கப்பட்டு வந்த நிலையில், கரூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அதை மாணவர்களுக்கு நவீன வடிவில் பதித்திருப்பது, பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது.
உலகப் பொதுமறை என்று சொல்லப்படும் திருக்குறள், உலக அளவில் பைபிளுக்கு அடுத்து அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக விளங்குகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம், வெள்ளியணையில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ஆசிரியர் மனோகர், 1330 திருக்குறள்களையும் உரையுடன் க்யூ.ஆர்.கோட் வடிவில் உருவாக்கியுள்ளார்.
இது குறித்து, அவரிடம் பேசினோம்.
”கன்னியாகுமரியில் வான்புகழ் கொண்ட வள்ளுவரின் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக, பல்வேறு நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்தகைய, வள்ளுவன் எழுதிய இந்த மேன்மை கொண்ட திருக்குறள் முதன் முதலில் ஓலைச் சுவடியில் அவரால் எழுதப்பட்டது. பின்னர், அச்சு வடிவம் பெற்று நூலாக வெளியிடப்பட்டு நாம் படித்து வருகிறோம்.
தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணையத்திலும், பல்வேறு தளங்களிலும் திருக்குறளின் அனைத்து அதிகாரங்களும் கிடைக்கின்றன. இப்போதைய தலைமுறையான மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் விகிதம் அதிகரித்து வருகிறது. அப்படி, மாணவர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக 1330 திருக்குறள்களையும் உரையுடன் க்யூ.ஆர் கோட் வடிவில் மாற்றம் செய்துள்ளேன்.
ஒவ்வொரு திருக்குறளின் எண், குறள், உரை என மூன்றும் இடம்பெறும் வகையில் உருவாக்கியுள்ளேன். தனித்தனி க்யூ. ஆர் கோடாக 1330 விரைவுத் துலங்கல் குறியீடுகள் தயார் செய்து, அதனைப் புத்தக வடிவிலும், தனித்தனியாகவும் செய்துள்ளேன். இதனை வகுப்பறையில் ஒட்டி வைத்துள்ளேன்.
மாணவர்கள் மொபைல் மற்றும் டேப் வழியே இதற்கென உள்ள செயலி வழியே ஸ்கேன் செய்து படித்துப் பார்க்கலாம். பொருளும் அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்ஆப் வழியே மற்றவர்களுக்கும் பகிரலாம். வழக்கமாக மாணவர்கள் திருக்குறளைப் பாட நூலில் படித்து வருகின்றனர். திருக்குறள் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தொழில்நுட்ப உதவியுடன் தூண்டும் விதமாக இக்குறியீடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாணவர்கள் டேப், அலைபேசி போன்ற சாதனங்களை அதிகம் பயன்படுத்த விரும்புகின்றனர். அதனால், இத்தகைய விழுமியம் தங்கிய நூல்களை அவர்களுக்குப் பிடித்த வழியில் கொண்டு இணைத்து, அவர்களைப் படிக்க வைக்கத் தூண்டுவதே இதன் நோக்கம்.
அதனால், மாணவர்களுக்குப் பிடித்த வழியில் கொண்டு சேர்ப்பதால், இதனை அவர்கள் கற்றல், கற்பித்தலுக்குப் பயன்படுத்தும் விதமாகவும் இந்த QR Code பயன்படுகிறது. மாணவர்கள் தனக்குப் பிடித்த அல்லது தெரிந்த எந்தக் குறளையும் ஸ்கேன் செய்து கற்றுக் கொள்ளும் வகையில் இந்த அமைப்பு உள்ளது.
இந்த QR Code கொண்டு பொது மக்களுக்கும் திருக்குறள் ஆர்வத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். இந்த முயற்சி எல்லா அரசு, தனியார்ப் பள்ளி, கல்லூரிகளுக்கும் கொண்டு சேர்த்து, திருக்குறளை இந்த தலைமுறை மாணவர்களிடமும் பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs