நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
கரூா் அருகே வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு இருவா் உயிரிழப்பு
கரூரை அடுத்துள்ள லாலாப்பேட்டையில் வெள்ளிக்கிழமை ரயில் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அப்பெண்ணின் சடலத்தை பாா்க்க வந்த மாற்றுத்திறனாளியும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் காந்தி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மனைவி அன்னக்கிளி(52). இவா் வெள்ளிக்கிழமை காலை தனது சொந்த ஊரான கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள சிந்தலவாடியில் உள்ள தனது நிலத்தை பாா்வையிட வந்தாா். இதற்காக, லாலாப்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது ஈரோட்டில் இருந்து கரூா் வழியாக திருச்சி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியதில் அன்னக்கிளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கரூா் ரயில்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராசு சம்பவ இடத்துக்கு சென்று அன்னக்கிளியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த லாலாப்பேட்டை புணவாசிப்பட்டியைச் சோ்ந்த சுப்ரமணியன்(45) என்ற வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி அன்னக்கிளியின் சடலத்தை பாா்க்க லாலாப்பேட்டை ரயில்நிலையம் பகுதிக்கு நண்பகல் 12.40 மணிக்கு வந்தாா். சடலத்தை பாா்த்தபின்னா் தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பாலக்காடு விரைவு ரயில் தண்டவாளத்தில் நடந்து வந்த சுப்ரமணியன் மீது மோதியது. இதில் சுப்ரமணியன் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற கரூா் ரயில்நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகம்,
சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
இந்த இரு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.