கரை ஒதுங்கிய ‘டூம்ஸ் டே’ மீன்! பேரழிவுக்கான அறிகுறியா?
மெக்சிகோ கடல் பகுதியில் ‘டூம்ஸ் டே’ (இறுதி நாள்) மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ (Oar) மீன்கள் கரை ஒதுங்கியுள்ளதினால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள பாஜா கலிபோர்னியா சுரின் எனும் ஆழமற்ற நீர்நிலைகளின் கரையில், ஆழ் கடலில் மட்டுமே காணப்படும் நீள ரிப்பன் போன்ற உடலமைப்புடன் ஆரஞ்சு நிற துடுப்புகளுடன் கூடிய ‘டூம்ஸ் டே’ மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ’ஓர்’ மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
மிகவும் அரிதாகவே காணப்படும் இந்த மீன்களை ஜப்பானிய புராணக் கதைகளில் கடல் கடவுளின் தூதன் என்று வர்ணிக்கப்படுகிறது. பெரும்பாலும், வரப்போகும் பேரழிவுகளின் அறிகுறியாக இவை இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கும் எனக் கருதப்படுகின்றது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் மிகப்பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்திய சுனாமிக்கு முன்னர் சுமார் 20 ’டூம்ஸ் டே’ மீன்கள் இறந்த நிலையில் அந்நாட்டு கடல் பகுதிகளில் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
இதனைத் தொடர்ந்து, தற்போது மெக்சிகோவின் கடல் பகுதிகளில் இவ்வகை மீன்கள் சமீப காலமாக கரை ஒதுங்கும் விடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. இதனால், மிகப்பெரிய அளவிலான பேரழிவு ஏற்பட இருப்பதாக இணையவாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இவை அனைத்தும் கட்டுக்கதைகள் எனவும் கடலினுள் ஏற்படுகின்ற ’எல் நினோ’ மற்றும் ’லா நினா’ போன்ற சூழ்நிலை மாற்றங்களினால் மட்டுமே இவை பெரும்பாலும் இறந்து கரை ஒதுங்குவதாக அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், கடல் நீரின் வெப்ப நிலை மாற்றங்கள், நோய்கள் மற்றும் காயங்கள் ஆகிய காரணங்களினால் கூட இவை மரணித்து கரை ஒதுங்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, சுமார் 36 அடி நீளம் வரையில் வளரக்கூடிய இந்த அரிய வகை ஓர் மீன்கள், கடலின் 656 அடி முதல் 3,280 அடி வரையிலான ஆழத்தில் வாழக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.