மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் மோதியதில் வாகன ஓட்டுநர் பலி!
கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு, எச்.எஸ்.ஆர்.லேஅவுட்டில் உள்ள தனது வீட்டில் கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகன் கார்த்திகேஷ் அளித்த புகாரின்பேரில், எச்.எஸ்.ஆர்.லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார்த்திகேஷ் அளித்த புகார் மனுவில், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது தாய் பல்லவி, சகோதரி கிருதி ஆகியோர் எனது தந்தை ஓம் பிரகாஷை கொலை செய்திருக்கலாம். எனது தந்தையுடன் தாய், சகோதரி ஆகியோர் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். எனது தாய் பல்லவி கொலை மிரட்டல் விடுத்து வந்ததால், கடந்த ஒரு வாரமாக எனது தந்தை ஓம் பிரகாஷ், அவரது சகோதரி சரிதாகுமாரி வீட்டில் தங்கியிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஓம் பிரகாஷ் மதிய உணவை உட்கொண்டிருந்தபோது, முகத்தில் மிளகாய்ப் பொடியை அவரது மனைவி பல்லவி தூவியுள்ளார். இதனால் நிலைகுலைந்த ஓம் பிரகாஷை கத்தியால் 8 முறை அவர் குத்தி கொலை செய்ததாக போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பல்லவியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மகள் கிருதியை தடுப்புக் காவலில் வைத்துள்ள போலீஸார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் ஓம் பிரகாஷின் உடல்கூறாய்வு செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மூத்த காவல் துறை அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு வில்சன் கார்டனில் உள்ள மின் மயானத்தில் திங்கள்கிழமை முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தக னம் செய்யப்பட்டது.