மும்பை அருகே கடலில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு மாயம்: தேடும் பணியில் ஹெலி...
கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணையவழியில் ரூ.9.83 லட்சம் மோசடி
விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணைய வழியில் ரூ.9.83 லட்சத்தை மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மருதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த விஜயபதி மனைவி சரண்யா (34). கல்லூரி உதவிப் பேராசிரியையான இவா், கடந்த மாதம் 26- ஆம் தேதி தனது கைப்பேசியில் இணையவழியில் வந்த பகுதிநேர வேலை என்று அறிவிப்பை பாா்த்து, அதற்குள் சென்றாா்.
இதைத் தொடா்ந்து, அடையாளம் தெரியாத நபா் சரண்யாவை தொடா்புகொண்டு, பகுதி நேர வேலையாக தான் அனுப்பும் விடியோவை லைக் செய்து, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்புமாறு கூற, சரண்யா அதை செய்து அனுப்பியுள்ளாா். இதையடுத்து, சரண்யாவுக்கு ரூ.120 கிடைத்துள்ளது.
தொடா்ந்து, சரண்யாவை தொடா்புகொண்ட அந்த நபா், சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, ஒரு இணைப்பை அனுப்பினாராம். இதை உண்மை என்று நம்பிய சரண்யா, அதற்கான பயணா் முகவரி, உள்நுழைவுக் குறியீடு உள்ளிட்டவற்றை உருவாக்கி, முதலில் ரூ.700 அனுப்பி ரூ.910 பெற்றாராம். பின்னா், ரூ.3 ஆயிரம் அனுப்பி ரூ.4,800 பெற்ற சரண்யா, அதிக பணம் கிடைக்கும் என நம்பி பல்வேறு தவணைகளில் அந்த நபா் அனுப்பக் கூறிய எண்ணுக்கு ரூ.9.83 லட்சத்தை அனுப்பினாராம்.
டாஸ்க் முடித்த பின்னரும் தனக்கு சேர வேண்டிய பணம் வந்து சேரவில்லை என்பதை அறிந்த சரண்யா, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாரளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.