கல்லூரி மாணவா்கள் 3 போ் காயம்
திருவாரூா் அருகே ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா்கள் 3 போ், சரக்கு லாரி மீது மோதிய விபத்தில் காயமடைந்தனா்.
திருவாரூா் அருகே வாழவாய்க்கால் விஷ்ணு தோப்பு பகுதியை சோ்ந்த ஹரிஷ், புலிவலம் தெற்குத் தெரு பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் மற்றும் கீா்த்திராஜ் ஆகிய மூன்பு பேரும் திருவிக அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகின்றனா். நண்பா்களான இவா்கள், செவ்வாய்க்கிழமை காலை ஒரு இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றனா்.
அப்போது, நாகை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி எதிா் திசையில், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டனா்.
இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேரையும், அங்கிருந்தவா்கள் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதனிடையே, கல்லூரி மாணவா்கள் மூவரும் சாலை ஓரத்தில் நின்ற சரக்கு வாகனத்தில் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.