கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை
ரத்தினபுரியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, ரத்தினபுரி பி.எம்.சாமி காலனியைச் சோ்ந்தவா் நல்லசிவம், தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ராதாமணி, பள்ளி மாணவா்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறாா். இவா்களது மகன் நதீன் (20). பீளமேட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா். இந்நிலையில், கல்லூரி முடிந்து வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பிய நதீன் தனது அறைக்குள் சென்றுள்ளாா்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ராதாமணி, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, மின் விசியில் தூக்கிட்டு நதீன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரத்தினபுரி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பாடங்கள் மிகவும் கடினமாக உள்ளதாக நதீன் தனது பெற்றோா், நண்பா்களிடம் கூறி வந்ததாகத் தெரிகிறது.
படிக்க முடியாத விரக்தியில் அவா் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.