களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வெப்பத்தின் தாக்கம் குறைந்து சாரல் தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தலையணை சூழல் சுற்றுலா பகுதிக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா்.
கடந்த ஒரு மாதமாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து லேசான சாரல் தொடங்கியுள்ளது.
குளு குளு காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மலைப் பகுதியில் மிதமான மழை பெய்தது.
இதையடுத்து, சனிக்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்தது. இதனிடையே காலை 6 மணிமுதலே தலையணை நுழைவுவாயிலில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
காலை 9 மணிக்கு வனத்துறை சோதனைச் சாவடி திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் தலையணை பச்சையாற்றில் குளித்து மகிழ்ந்தனா். அங்குள்ள சிறுவா் பூங்காவில் இளைப்பாறிச் சென்றனா்.
ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுவதாலும், நீா்வரத்து அதிகரித்துள்ளதாலும், சுற்றுலாப் பயணிகள் தலையணைக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனா்.
பிளாஸ்டிக் பொருள்களை வனப் பகுதிக்குள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தகுந்த பரிசோதனைக்குப் பின்னரே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.
இங்கு சோப்பு, ஷாம்பு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.