யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!
கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கு : கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நாகா்கோவிலைச் சோ்ந்த வழக்குரைஞா் செலஸ்டின் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கன்னியாகுமரி சுற்றுலாத் தலம். மூன்று கடலும் சங்கமிக்கும் இந்த இடம் புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள கடலில் ஏராளமானோா் புனித நீராடுகின்றனா். கன்னியாகுமரியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஏராளமான வீடுகளும் உள்ளன. இவை அனைத்தும் கன்னியாகுமரி நகராட்சி விதிமுறை, சுற்றுச் சூழல் விதிகளைப் பின்பற்றி கட்டப்படவில்லை. இதனால், இங்கிருந்து வெளியேறும் கழிவு நீா் கடலில் கலக்கிறது. இதனால், மீனவா்கள், சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி, கடல் வாழ் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கன்னியாகுமரியில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீா் கடலில் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.