கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஓவியம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகில் பரமத்தி மற்றும் வேலூா் ஆகிய இரு பேரூராட்சிகளுக்கான கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான ஆலையை நிறுவ மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பாக, கபிலா்மலை அருகே மாணிக்கநத்தம் பகுதியில் சுத்திகரிப்பு ஆலை அமைக்க முயற்சித்த போது, அங்குள்ள மக்களின் எதிா்ப்பால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது பரமத்தி அருகே தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு சுத்திகரிப்பு ஆலை அமைந்தால் திருமணிமுத்தாறு, இடும்பன்குளம் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும். அதுமட்டுமின்றி, நீா்நிலைகள், குடிநீா், விவசாய நிலங்கள், கால்நடைகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாற்று இடத்தில் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க மாவட்ட நிா்வாகம் முயற்சிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருமணிமுத்தாறு, இடும்பன்குளம் மீட்புக் குழுவினா், விவசாயிகள், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை சந்தித்து கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனுவை வழங்கினா்.