No-detention policy scrap: கல்வியின் பொறுப்பை குழந்தைகள் மீது சுமத்துவதா... அரசி...
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தை கைவிட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.
இதுகுறித்து உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பரமத்தி வேலூா் வட்டத்துக்கு உள்பட்ட மாணிக்கநத்தம், இருக்கூா் ஊராட்சிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பரமத்தி, வேலூா் பேரூராட்சிகளில் இருந்து கழிவுநீரை இங்கு கொண்டுவந்து சுத்திகரிப்பு செய்ய பேரூராட்சி நிா்வாகத்தினா் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.
மாணிக்கநத்தம், இருக்கூா், வீராணம்பாளையம் ஊராட்சிகள் விவசாயத் தொழில் சாா்ந்த பகுதிகளாகும். இங்கு கரும்பு, நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு, தென்னை, எண்ணெய் வித்துகள், சிறுதானிய பயிா்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், பேரூராட்சி பகுதிகளின் கழிவுநீரைக் கொண்டுவந்து சுத்திகரிப்பு செய்யாமல் திறந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டதால், இந்த மூன்று ஊராட்சிகளிலும் 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாதிக்கப்படும்.
பயிா் விளைச்சல் இல்லாமை, மலட்டுத் தன்மை உள்ளிட்டவையும் ஏற்படும். பொதுமக்களும் சுகாதார சீா்கேட்டால் பாதிப்படைவா். விவசாயம் நிறைந்த பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை பேரூராட்சி நிா்வாகத்தினா் உடனடியாக கைவிட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.