கழுகார் : `கன்ட்ரோலில் சொத்துகள்’ - ஆளும் தரப்பிலிருந்து `சின்ன தலைவி’க்கு ஆதரவு கொடுப்பது யார்?
தமிழகத்தையே உலுக்கிய ஆணவப் படுகொலைக்குப் பிறகு, முதன்மையானவரைச் சந்தித்த மீசைத் தலைவர், ‘ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை’ உடனடியாக நிறைவேற்றுங்கள் எனக் கேட்டிருந்தார். அதற்கு, ‘அமைச்சரவைக் கூட்டத்தில் அது குறித்துப் பேசவிருக்கிறோம்’ எனச் சமாளித்திருந்தார் முதன்மையானவர். அந்தச் சமயத்தில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரம் பூதாகரமாகவும், ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டக் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இது, மீசைத் தலைவருக்கு அவரது கட்சிக்குள்ளும் சமூக ஊடகங்களிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தவே, ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்துக்கொண்டு மீண்டும் முதன்மையானவரைச் சந்தித்திருக்கிறார் மீசைத் தலைவர்.
‘ஆளும் தரப்புக்கு எப்போதெல்லாம் பிரச்னைகள் வருகிறதோ, அப்போதெல்லாம் அவர்களுக்குத் துணை இருக்கிறோம். ஆனால், நாம் கேட்கும் எதையுமே செய்துக்கொடுக்கக் கூடாது என்பதில் ஆளும் தரப்பு உறுதியாக இருக்கிறது. இப்படியே போனால், கூட்டணியில் இருந்து என்ன பயன்..?’ என, சக நிர்வாகிகளிடம் மனம் வெதும்பிப் பேசியிருக்கிறாராம் மீசைத் தலைவர்!
நூற்றாண்டுப் பழமை வாய்ந்த நகராட்சி மார்கெட் கடைகளை இடித்துவிட்டு, புதிய கட்டுமானத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் ‘ஜில்’ மாவட்டத் தலைநகரில். முதற்கட்டமாக 20 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சி உறவினர் புள்ளிக்கு நெருக்கமான நிறுவனம்தான் டெண்டர் எடுத்திருக்கிறதாம். திட்டமிட்டபடியே கட்டுமானப் பணிகள் தொடங்கினாலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த நகராட்சித் துணையானவரில் தொடங்கி, கவுன்சிலர்களின் ஓட்டுநர் வரையில், கமிஷன் கேட்டு நாள்தோறும் நச்சரித்து வந்திருக்கிறார்கள்.
‘எல்லாத்தையும்தான் தலைநகரில் கொடுத்துவிட்டோமே... கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள்...’ என நிறுவனத் தரப்பில் சொன்னபோது, விடாப்பிடியாக கமிஷன் கேட்டிருக்கிறார்கள் சில கவுன்சிலர்கள். டென்ஷனான நிறுவனம், கட்டுமானப் பணிகளை நிறுத்திவிட்டு தலைதெறிக்க ஓடிவிட்டதாம். கடந்த சில மாதங்களாகக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்து வணிகர்கள் கேள்வி எழுப்ப, என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறதாம் நகராட்சி நிர்வாகம்!
வரி வசூலிப்பதில் எழுந்த மோசடிப் புகாரில், மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. இந்தச் சூழலில், ‘மேயர் பதவியிலிருந்து இந்திராணியை மாற்ற வேண்டும்’ என மதுரைக்குள் குரல்கள் எழுந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து, அவரை மாற்றும் முடிவு குறித்து கட்சித் தலைமையும் யோசித்துவருகிறதாம். ஏற்கெனவே இந்திராணிக்கு சிபாரிசு செய்து பதவியை வாங்கிக் கொடுத்ததே இன்ஷியல் மாண்புமிகுதான். அந்தக் கடுப்பில், கட்சித் தலைமை இருக்கும் நிலையில், அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், தன் பங்குக்கு ஒருவரின் பெயரை சிபாரிசு செய்திருக்கிறாராம் இன்ஷியல் மாண்புமிகு.

அதேநேரம், பாதி கவுன்சிலர்களைத் தன் எல்லைக்குள் வைத்திருக்கும் இன்னொரு மாண்புமிகுவும், தனக்கு ஆதரவான ஒருவரின் பெயரை சிபாரிசு செய்திருக்கிறாராம். இதற்கிடையே, ‘இந்த முறையாவது நமக்குத் தோதானவரைக் கொண்டுவர வேண்டும்’ என்று, துறையின் மீசை மாண்புமிகுவும் காய்நகர்த்துவதால், மதுரை தி.மு.க-வே பரபரத்துக் கிடக்கிறது. ‘ஆளுக்கொரு ரூட்டுல காய்நகர்த்துறாங்க. ஆனா, இவங்க யாருமே எதிர்பார்க்காத வகையில, புது மேயர் வரப்போறார்...’ எனக் கண்ணைச் சிமிட்டுகிறார்கள் தூங்காநகர தி.மு.க-வினர்!
நாட்டின் உயரிய பதவிக்குப் போட்டியிடும் சீனியரை, கொங்கு ஏரியாவிலுள்ள முக்கியஸ்தர்கள் பலரும், நேரிலும் போனிலும் தொடர்புகொண்டு வாழ்த்தி வருகிறார்களாம். அப்படி தன்னைத் தொடர்புகொள்ளும் முக்கியஸ்தர்களிடம் எல்லாம், ‘தேர்தல் சமயத்துல நம்ம கட்சிக்கு உதவுங்க...’ எனத் தான் சார்ந்த கட்சிக்காக, கோரிக்கை வைத்து வருகிறாராம் சீனியர்.
விரைவிலேயே உச்சப் பொறுப்புக்கு அவர் செல்லவிருப்பதால், அவரின் கோரிக்கையை முக்கியஸ்தர்களால் மறுக்க முடியாமல் தலையாட்டுகிறார்களாம். இந்தநிலையில், ஏற்கெனவே அந்த முக்கியஸ்தர்களிடம் உதவியை நாடியிருக்கும் ஆளும் கட்சியின் கொங்கு ஏரியா முக்கியப் புள்ளிகள், ‘அவர் கட்சிக்கு உதவி கேட்பது சரி, இதனால நமக்குக் கிடைக்கிற உதவியில முட்டுக்கட்டை விழுமோ..?’ என உதறலில் இருக்கிறார்களாம்!
தமிழகத்தையே புரட்டிப்போட்ட அந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பாகி, வழக்கோடு சம்பந்தப்பட்ட பல்வேறு சொத்துகளும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசாங்கத்தின் வசம் சென்றுவிட்டன. இந்த நிலையில், டெல்டாவிலும் தலைநகரை ஒட்டிய ஏரியாவிலும் இருக்கும் சில சொத்துகளை, தங்களுடைய கன்ட்ரோலில் எடுத்திருக்கிறார்களாம் சின்ன தலைவியின் குடும்பத்தினர்.
‘அரசாங்கம் கையகப்படுத்திய சொத்துக்களை, அவர்கள் எப்படி கன்ட்ரோல் எடுக்க முடியும்... இதை அரசுத் தரப்பு எப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறது... அப்படியென்றால், ஆளும் தரப்பிலிருந்து சின்ன தலைவிக்கு ஆதரவு கொடுப்பது யார்?’ என அதிகாரிகள் வட்டாரத்தில் பட்டிமன்றமே நடக்கிறதாம்!