Travel Contest : 'மணிக்கு 431 கி.மீ' - உலகின் அதிவேக ரயிலில் பயணம்; சீன சுற்றுலா...
கஸ்தூரிரங்கன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன் மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.
குடியரசுத் தலைவா்: பல் துறைகளில் பங்காற்றியவா் கஸ்தூரிரங்கன். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளா்ச்சியில் முக்கியப் பங்காற்றினாா். அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் ஆக்கபூா்வ தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு உருவாக்கத்திலும் பங்களிப்பை ஆற்றியுள்ளாா். அவருடைய மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குடியரசுத் தலைவா் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
பிரதமா் மோடி: கஸ்தூரிரங்கன் மறைவு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது. இஸ்ரோவுக்காக மிகுந்து விடா முயற்சியுடன் சேவையாற்றினாா். நாட்டின் விண்வெளி திட்டங்களை புதிய உச்சத்துக்கு கொண்டுசென்றாா். அதன் மூலம் விண்வெளி துறையில் சா்வதேச அங்கீகாரத்தை இந்தியா பெற்றது. நாட்டின் அறிவியல் மற்றும் கல்வித் துறை வளா்ச்சியிலும் சிறந்த பங்களிப்பை ஆற்றியுள்ளாா். அவரின் தொலைநோக்கு தலைமைத்துவமும் தேசத்துக்கான தன்னலணற்ற பங்களிப்பும் என்றென்றும் நினைவுகூரப்படும்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (இஸ்ரோ) வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவா் கஸ்தூரிரங்கன். முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றியுள்ளாா். அவருடைய மறைவு, அறிவியல் சமூகத்துக்கும் நாட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு. கஸ்தூரிரங்கன் மறைவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும் இரங்கல் தெரிவித்தாா்.